பண்பை விளக்கும் மொழி தொக்கனவும் = பண்போடு பண்பிக்கு உளதாகிய ஒற்றுமை நயத்தை விளக்குதற்கு வரும் ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கு நின்றவையும் , ஒரு பொருட்கு இருபெயர் வந்தவும் = ஒரு பொருளுக்குப் பொதுப்பெயரும் சிறப்புப்பெயரும் ஆகிய இருபெயர்கள் வந்தவையும் , குணத்தொகை - பண்புத்தொகைகளாம். குணத்தொகை என்றதனால், ஒருபொருளுக்கு வரும் அவ் இருபெயர் நடுவினும், ஆகிய என்னும் பண்பு உருபு தொக்குவரும் என்பது பெறப்பட்டது. பண்பு எனப் பொதுப்படச் சொன்னதனால், வண்ணம், வடிவு, அளவு, சுவை முதலாயினவை எல்லாம் கொள்க. (வ-று) செந்தாமரை, கருங்குதிரை வண்ணப் பண்புத் தொகை. வட்டக்கல், சதுரப் பலகை வடிவுப் பண்புத் தொகை. ஒரு பொருள், முக் குணம் அளவுப் பண்புத்தொகை. துவர்க் காய், இன்சொல் சுவைப் பண்புத்தொகை. ஆயன் சாத்தன், சாரைப் பாம்பு இருபெயர் ஒட்டுப்பண்புத் தொகை செந்நிறக் குவளை, கரும்புருவச்சிலை பன்மொழித் தொடர்.இவை , விரியும் இடத்துச் செம்மையாகிய தாமரை, வட்டமாகிய கல், ஒன்றாகிய பொருள், துவர்ப்பாகிய காய், ஆயனாகிய சாத்தன், செம்மையாகிய நிறமாகிய குவளை என விரியும். 14
|