|
| பொதுப்பாயிரம் நூலினது வரலாறு உரையினது பொது இலக்கணம் | | 21 | பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள் தொகுத்துரை யுதாரணம் வினாவிடை விசேடம் விரிவதி காரந் துணிவு பயனோ டாசிரிய வசனமென் றீரே ழுரையே . | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | பாடம் - மூல பாடமும் , கருத்து - கருத்துரையும் , சொல் வகை - பதச் சேதமும் , சொற் பொருள் - பதப் பொருளும் , தொகுத்துரை - பொழிப்புரையும் , உதாரணம் - உதாரணமும் , வினா - வினாவும் , விடை - விடையும் , விசேடம் - வேண்டியவைகளைத் தந்துரைத்தலும் , விரிவு வேற்றுமை உருபு முதலியவை தொக்கு நிற்பின் அவைகளை விரித் துரைத்தலும் , அதிகாரம் - எடுத்துக் கொண்ட அதிகாரம் இதுவாதலின் இச் சூத்திரத்து அதிகரித்த பொருள் இது வென அவ்வதிகாரத்தோடு பொருந்த உரைத்தலும் , துணிவு - சந்தேகிக்க நின்ற விடத்து இதற்கு இதுவே பொருளெனத் துணிந்து உரைத்தலும் , பயன் - இப்படிச் சொல்லியதனால் வந்த பயன் இது என உரைத்தலும் , ஆசிரிய வசனம் - ஆசிரிய வசனங்காட்டுதலும் , என்ற ஈரேழ் உரை - என்று சொல்லப்பட்ட பதினான்கு வகையாலும் உரைக்கப்படும் நூலுக்கு உரை .
|
|