பொதுப்பாயிரம்

நூலினது வரலாறு
சூத்திரங்களுக்குக் காரண வகையால்
வரும் பெயர் வேறுபாடு

 
20பிண்டந் தொகைவகை குறியே செய்கை
கொண்டியல் புறனடைக் கூற்றன சூத்திரம் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
சூத்திரம் - மேற்கூறிய சூத்திரங்கள் , பிண்டம் - பிண்ட சூத்திரமும் , தொகை - தொகைச் சூத்திரமும் , வகை - வகைச் சூத்திரமும் , குறி - குறிச் சூத்திரமும் , செய்கை - செய்கைச் சூத்திரமும் , கொண்டு இயல் புறனடை - இவைகளை அலைவு அறக் கொண்டு இவைகளின் புறத்து அடையாய் வரும் புறனடைச் சூத்திரமும் ஆகிய , கூற்றன - ஆறு பிரிவை உடையனவாம் .

பிண்ட சூத்திரமாவன பல திறப் பொருள்களையும் உள்ளடக்கிக் கொண்டு பொதுப்பட வருவன ; அவை "நன்கு இயம்புவன் எழுத்தே" (சூத்திரம் 56) என்றாற் போல்வன .

தொகைச் சூத்திரமாவன அப் பல திறப் பொருள்களையும் வேறு வேறாகத் தொகுத்துச் சொல்வன ; அவை பன்னிருபாற்றதுவே (சூத்திரம் 57) என்றாற் போல்வன.

வகைச் சூத்திரமாவன அத் தொகுத்துச் சொல்லப் பட்டவைகளை வேறு வேறாக வகுத்துச் சொல்வன ; அவை எண்ணிலக்கண முதலாக வகுத்தோதிய சூத்திரங்கள் போல்வன.

குறிச் சூத்திரமாவன இவை உயிர் இவை ஒற்று இவை பெயர் இவை வினை என்றல் தொடக்கத்து அறிதல் மாத்திரையாய் வருவன ; அவை "அம்முத லீராறாவி" (சூத்திரம் 63) என்றாற் போல்வன .

செய்கைச் சூத்திரமாவன புணர்ச்சி விதி யறிந்து புணர்த்தலைச் செய்தலும் முடிபு விதி யறிந்து முடித்தலைச் செய்தலும் முதலியன ; அவை "ணன வல்லினம் வரட் டறவும்" (சூத்திரம் 209) எனவும் , "முதலறு பெயரல தேற்பில முற்றே" (சூத்திரம் 323) எனவும் வருவன போல்வன .

புறனடைச் சூத்திரங்கள் "மொழியாய்த் தொடரினும்" (சூத்திரம் 127) எனவும் , "இதற்கிது முடிபென்று" (சூத்திரம் 257) எனவும் வருவன போல்வன .

புறன் + அடை - புறனடை , புறத்து அடையாய் வந்தது ; புறம் + நடை - புறநடை , வேறு விதமாகிய நடக்கை எனினும் பொருந்தும் .

ஆறு வகைப்படச் சொல்லினும் , குறிச் சூத்திரம் செய்கைச் சூத்திரம் என்னும் இரண்டின் உள்ளே மற்றை நான்கும் அடங்கும் .