இடையியல்

ஏகார இடைச்சொல்

 
422 பிரிநிலை வினாவெண் ணீற்றசை தேற்றம்
இசைநிறை யெனவா றேகா ரம்மே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
பிரிநிலை = பிரிநிலையும் , வினா = வினாவும் , எண் = எண்ணும் , ஈற்றசை = ஈற்றில் அசைத்தலும் , தேற்றம் = தெளிவும் , இசைநிறை = இசைநிறைத்தலும் , என ஆறு ஏகாரம் = என்று ஆறு பொருளைத் தரும் ஏகார இடைச் சொல் .
1. அவருள் இவனே கள்வன் - இங்கே ஒரு கூட்டத்தினின்றும் ஒருவனைப் பிரித்து நிற்றலால் பிரிநிலை .

2. நீயே கொண்டாய் - இங்கே நீயா கொண்டாய் என்னும் பொருளைத் தரும் இடத்து வினா.

3. நிலமே நீரே தீயே வளியே = இங்கே நிலமும் நீரும் தீயும் வளியும் எனப் பொருள்பட எண்ணி நிற்றலால் எண் .

4. " என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே " இங்கே வேறு பொருள் இன்றி இறுதியிலே சார்த்தப்பட்டு நிற்றலால் ஈற்றசை .

5 . உண்டே மறுமை - இங்கே உண்டு என்பதற்கு ஐயம் இல்லை என்னும் தெளிவுப் பொருளைத் தருதலால் தேற்றம்.

6. " ஏயே இவளொருத்தி பேடியோ என்றார்."- இங்கே வேறுபொருள் இன்றிச் செய்யுளில் இசை நிறைத்து நிற்றலால் இசைநிறை.

"அவனே கொண்டான் " என்பது ஒர் ஓரிடத்து அவன் கொண்டிலன் என எதிர்மறைப் பொருள் பட நிற்றல் புதியன புகுதலும் வழுவல என்பதனால் கொள்க.

3