புள்ளியும் உயிரும் ஆய் இறு சொல் முன்-மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சியுள் ஒற்றும் உயிரும் இறுதியாக நின்ற சொற்களின் முன் , தம்மின் ஆகிய தொழில் மொழி வரின் - கருவி , கருத்தா , உடன் இகழ்ச்சி என்பவற்றுட் கருத்தாவாகிய நிலைமொழிப் பொருள்களாகிய தொழிற் சொல் வந்தால் , வல்லினம் விகற்பமும் இயல்பும் ஆகும் = அவ்விடத்து வரும் வல்லினம் வேற்றுமைப் பொதுமுடிபு ஏலாது உறழ்ச்சியும் இயல்பும் ஆகும் . இவ்விதியும் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி போல ஒப்பன கொள்க . 1. பேய்கோட்பட்டான் , பேய்க்கோட்பட்டான் ; சூர்கோட்பட்டான் , சூர்க்கோட்பட்டான் ; புலி கோட்பட்டான் , புலிக்கோட்பட்டான் என வல்லினம் ஒருகால் மிகுந்தும் ஒருகால் இயல்பாயும் விகற்பித்தன . 2. பேய் பிடிக்கப்பட்டான் , புலி கடிக்கப்பட்டான் என வல்லினம் இயல்பாயின . உம்மையால் அராத் தீண்டப்பட்டான் , சுறாப் பாயப்பட்டான் என வேற்றுமைப் பொதுவிதியால் மிக்கு முடிவனவே பெரும்பாலன என்க .
|