எழுத்தியல்

பிறப்பு
உயிர்மெய்

 
89புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும்
ஏனை யுயிரோ டுருவு திரிந்தும்
உயிரள வாயதன் வடிவொழித் திருவயிற்
பெயரொடு மொற்றுமுன் னாய்வரு முயிர்மெய்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
புள்ளி விட்டு-மெய் புள்ளியை விட்டு , அவ்வொடு முன் உரு ஆகியும் - அகரத்தோடு கூடிய வழி அவ்விட்ட உருவே உருவாகியும் , ஏனை உயிரோடு உருவு திரிந்தும் - அஃது ஒழிந்த உயிர்களோடு கூடியவழி உருவு வேறுபட்டும் , உயிர் அளவு ஆய் - தன் மாத்திரை தோன்றாது உயிர் மாத்திரையே மாத்திரையாய் , அதன் வடிவு ஒழித்து - தன் வரிவடிவின் விகாரவடிவே வடிவாய் உயிர் வடிவை ஒழித்து , இருவயிற் பெயரொடும் - உயிரும் மெய்யுமாகிய இரண்டு இடத்தும் பிறந்த உயிர்மெய் என்னும் பெயருடனே , ஒற்று முன் ஆய் - ஒற்றொலி முன்னும் உயிரொலி பின்னுமாகி , உயிர்மெய் வரும் - உயிர்மெய் எழுத்து வரும் .

பன்னிரண்டு உயிரும் பதினெட்டு மெய் மேலும் தனித்தனி ஏறி வருதலால் , உயிர்மெய் இருநூற்றுப்பதினாறு ஆதல் காண்க .