உயிரீற்றுப் புணரியல்

ஊகார ஈற்றுச் சிறப்புவிதி

 
200பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
பூப் பெயர் முன் - பூ என்னும் பல பொருள் பெயர்ச்சொல்லின் முன் , இன மென்மையும் தோன்றும்- வல்லினம் வரின் பொது விதியால் மிகுதலே அன்றி அவற்றிற்கு இனமாகிய மெல்லினமும் மிகும்.

பூங்கொடி, பூஞ்சோலை, பூந்தடம், பூம்பணை என வரும்.

இவைகளுள்ளே பூ என்பது மலராயின், இரண்டாம் வேற்றுமைத்தொகை , அழகாயின் பண்புத்தொகை.

இனமென்மையும் தோன்றும் என்றது "இயல்பினும் விதியினும்" என்னும் சூத்திரத்தால் எய்தியதன்மேல் சிறப்பு விதி.