எழுத்ததிகாரம்
(எழுத்தினது அதிகரித்தலை உடைய படலம்)
எழுத்தியல்
கடவுள் வணக்கமும் அதிகாரமும்
 
56பூமலி யசோகின் புனைநிழ லமர்ந்த
நான்முகற் றொழுதுநன் கியம்புவ னெழுத்தே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
பூமலி அசோகின் புனை நிழல் அமர்ந்த நான் முகன் தொழுது - பூக்கள் நிறைந்த அசோக மரத்தினது அலங்கரிக்கப்பட்ட நிழலின்கண் எழுந்தருளியிருந்த நான்கு திருமுகங்களை உடைய கடவுளை வணங்கி , எழுத்து நன்கு இயம்புவன் - எழுத்திலக்கணத்தை நன்றாகச் சொல்வேன் யான்.

எழுத்து என்பது ஆகுபெயர். ஏகாரம் ஈற்றசை.

எல்லாம் வல்ல கடவுளை வணங்கலால் இனிது முடியும் என்பது கருதி நன்கு இயம்புவன் என்று புகுந்தமையின், இது நுதலிப் புகுதல் என்னும் உத்தி .