பொதுவியல்

எச்சங்களின் முடிபு

 
360பெயர்வினை யும்மைசொற் பிரிப்பென வொழியிசை
எதிர்மறை யிசையெனுஞ் சொல்லொழி பொன்பதுங்
குறிப்புந் தந்த மெச்சங் கொள்ளும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 

பெயர்ச் (சொல்லொழிபு) = பெயர் எச்சமும் , வினைச் (சொல்லொழிபு) = வினை எச்சமும், உம்மைச் (சொல்லொழிபு) - உம்மை எச்சமும் , சொற் (சொல்லொழிபு) = சொல் எச்சமும் , பிரிப்புச் (சொல்லொழிபு)= பிரிநிலை எச்சமும், எனச் (சொல்லொழிபு) = என எச்சமும் , ஒழியிசைச் (சொல்லொழிபு) = ஒழி இசை எச்சமும் ; எதிர்மறைச் (சொல்லொழிபு) = எதிர்மறை எச்சமும் இசைச்(சொல்லொழிபு) = இசை எச்சமும் ; எனும் சொல்லொழிபு ஒன்பதும் = என்னும் சொல் எச்சங்கள் ஒன்பதும் , குறிப் (பொழியும்) - குறிப்பு எச்சம் ஒன்றும் , தத்தம் எச்சம் கொள்ளும் - தந்தம் எச்சங்களைக் கொண்டு முடியும்.

எனவே எச்சங்கள் சொல் எச்சம் குறிப்பு எச்சம் என இருவகைப்படும் என்பதாயிற்று.

இப்பத்து எச்சங்கள் உள்ளும், பெயரெச்சம் வினையெச்சம் என எச்சம் என்னும் மூன்றற்கும் எச்சச்சொற்கள் வாக்கியங்களில் வெளிப்பட்டு நிற்கும், ஒழிந்தனவற்றிற்கு எச்சச்சொற்கள் வருவித்து உரைக்கப்படும்.

1. செய்த சாத்தன், நல்ல சாத்தன் எனப் பெயர் எச்சங்கள் தம் எச்சமாகிய செய்பவனது பெயர் கொண்டன.

2. செய்து வந்தான், செய்து நல்லன் ஆயினான் என வினை எச்சங்கள் தம எச்சமாகிய வினைமுற்றும் குறிப்பு முற்றும் கொண்டன.

3. சாத்தனும் வந்தான் என்னும் உம்மை எச்சம் முன்னே கொற்றன் வந்தான்எனத் தன்எச்சம் கொண்டது.

4. நல்லவன் என்றான் என்னும் சொல் எச்சம் நல்லவன் என்று சொன்னான் எனச் சொல் என்னும் தன் எச்சம் கொண்டது.

5. சாத்தனே கொண்டான், சாத்தனோ கொண்டான் என்பன பிரிநிலை எச்சம். இவை பிறர் கொண்டிலர் எனத் தம எச்சம் கொண்டன. கோடல் தொழிலால் சாத்தனினின்றும் பிரிக்கப்பட்டார் பிறர் ஆதலின் பிரிநிலை என்க.

6. கடல் ஒல்லென ஒலித்தது, நரம்பு விண்ணென இசைத்தது, தலைஇடியென இடித்தது என்பன என எச்சம். இவை தம் எச்சமாகிய வினை கொண்டன. மிகவும் ஒலித்தது,மிகவும் இசைத்தது மிகவும் இடித்தது என்பன இவற்றிற்குப் பொருளாம் ஆதலின், இவ்என எச்சம் மிகுதிப் பொருளைத் தருவதோர் இடைச்சொல்லாம் என்க.

7.கூரியதோர் வாள்மன், உண்ணுதற்கோ வந்தான் என்பன ஒழிஇசைஎச்சம்-இவை, முறையே கோடிற்று, கலகஞ்செய்ய வந்தான் எனத் தம் எச்சம் கொண்டன.

8."மறப்பினு மோத்துக் கொளலாகும்," யானோ செய்தேன் என்பன எதிர்மறை எச்சங்கள், இவை, முறையே, மறக்கலாகாது', யான் செய்திலேன் எனத் தம் எச்சம் கொண்டன.

9. "இசை எச்சமாவது வாக்கியங்களில் அவ் அவ்இடத்திற்கு ஏற்ப ஒரு சொல்லும் பல சொல்லுமாக வருவித்து உரைக்கப்பட்டு வருவதாம். இசையென்பது சொல். " கற்றதனா லாய பயனென்" என்புழி, நூலைக் கற்றதனால் என ஒரு சொல்லும், "அந்தா மரையன்னமே நின்னை யானகன் றாற்றுவனோ" என்புழி, என் உயிரினும் சிறந்த நின்னை எனப் பல சொற்களும் வருவிக்கப்படுதல் காண்க.

10. குறிப்பெச்சமாவது பெயரியலிலே பன்னிரண்டாம் சூத்திரத்திலே "ஒன்றொழி பொதுச்சொல்" என்பது முதலாக "இன்ன பிறவும்" என்றது வரைக்கும் சொல்லப்பட்டவைகளாம். ஆயிரம் மக்கள் பொருதார் என்புழி, மக்கள் என்னும் பொதுப்பெயர் ஆடவர்ன்னும் சிறப்புப்பெயர் கொண்டது. பிறவும் அச்சூத்திர உரையில் காண்க.

9