பொதுவியல்

பொருள்கோள்
நிரல் நிறைப் பொருள்கோள்

 
414பெயரும் வினையுமாஞ் சொல்லையும் பொருளையும்
வேறு நிரனிறீஇ முறையினு மெதிரினும்
நேரும் பொருள்கோ ணிரனிறை நெறியே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
பெயரும் வினையும் ஆம் சொல்லையும் பொருள்ளையும் = பெயரும் வினையுமாகிய சொற்களையும் அவை கொள்ளும் பெயரும் வினையுமாகிய பயனிலைகளையும் , வேறு நிறீஇ = வேறுவேறு வரிசையாக நிறுத்தி , முறையினும் எதிரினும் = முறையாகவேனும் எதிராகவேனும் , நேரும் பொருள்கோள் - இதற்கு இது பயனிலை என்பதுபடக் கூறும் பொருள்கோள் , நெறி நிரனிறை = நெறிப்பட்ட நிரல் நிறைப் பொருள்கோளாம்.

1. "கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி - மதிபவள முத்த முகம்வாய் முறுவல்
பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல்

வடிவினளே வஞ்சி மகள் " இது, கொடி நுசுப்பு, குவளை உண்கண், கொட்டை மேனி எனவும்; மதி முகம், பவளம் வாய்,முத்தம் முறுவல் எனவும்; பிடி நடை, பிணை நோக்கு, மஞ்ஞை சாயல் எனவும் பெயர்ச்சொற்களும் பெயர்ப் பயனிலைகளுமாய் நின்ற முறைநிரல் நிறை.

2. "காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப
போதுசேர் தார்மார்ப போர்ச்செழிய - நீதியான
மண்ணமிர்த மங்கையர்தோள் மாற்றாரை யேற்றார்க்கு நுண்ணிய வாய பொருள்."
இது, கா மண், து அமிர்தம், சேர் மங்கையர் தோள், தாழ் மாற்றாரை, குழை ஏற்றார்க்கு, ஆய் நுண்ணிய வாய பொருள் என வினைப் பயனிலைகளும் பெயர்களுமாய் நின்ற முறைநிரல் நிறை.

3."களிறுங் கந்தும் போல நளிகடற்
கூம்புங் கலனுந் தோன்றுந்
தோன்றன மறந்தோர் துறைகெழு நாட்டே "
இது, களிறு கலன், கந்து கூம்பு எனப் பெயர்ச்சொற்களும் பெயர்ப் பயனிலைகளுமாய் நின்ற எதிர்நிரல் நிறை. [கந்து - யானை கட்டுந்தறி. கூம்பு - பாய் மரம் ;கலன் - தோணி.]

4. "ஆடவர்க ளெவ்வா றகன்றொழிவார் வெஃகாவும்
பாடகமு மூரகமும் பஞ்சரமா - நீடியுமா
னின்றா னிருந்தான் கிடந்தானிது வன்றோ
மன்றார் மதிற்கச்சி மாண்பு."
இது, வெஃகா கிடந்தான், பாடகம் இருந்தான் ஊரகம் நின்றான் எனப் பெயர்ச் சொற்களும் வினைப் பயனிலைகளுமாய் நின்ற எதிர்நிரல் நிறை.
63