பதவியல்

பதம்
பகுபதம்

 
132பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின்
வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின் வருபெயர்-பொருளும் இடமும் காலமும் சினையும் குணமும் தொழிலும் காரணமாக வருகின்ற பெயர்ச்சொற்களும் , பொழுது கொள் வினை - தெரிநிலையாகவும் குறிப்பாகவும் காலத்தைக் கொள்ளும் வினைச் சொற்களும் , பகுபதம்-பகுபதங்களாகும் .

பொழுது கொள் வினை பகுபதம் எனவே, அவ் விரு வகை வினையாலணையும் பெயர்களும் பகுபதமாம் என்பது அருத்தாபத்தியால் கூறினார் என அறிக.

பொன்னன் என்பது பொருட்பெயர்ப் பகுபதம் .
அகத்தன் என்பது இடப்பெயர்ப் பகுபதம் ,
ஆதிரையான் என்பது காலப் பெயர்ப் பகுபதம் .
கண்ணண் என்பது சினைப்பெயர்ப் பகுபதம் .
கரியன் என்பது குணப்பெயர்ப் பகுபதம் .
ஊணன் என்பது தொழிற்பெயர்ப் பகுபதம் .

நடந்தான் , நடக்கின்றான் , நடப்பான் என்பன உடன்பாட்டுத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் .

நடந்த , நடக்கின்ற , நடக்கும் என்பன உடன்பாட்டுத் தெரிநிலை வினை பெயரெச்சப் பகுபதம் .

நடந்து , நடக்க , நடக்கின் என்பன உடன்பாட்டுத் தெரிநிலை வினை வினையெச்சப் பகுபதம் .

நடந்திலன் , நடக்கின்றிலன் நடவான் என்பன எதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் .

நடவாத என்பது எதிர்மறைத் தெரிநிலை வினை பெயரெச்சப் பகுபதம் .

நடவாது , நடவாமல் என்பன எதிர்மறைத் தெரிநிலைவினை வினையெச்சப் பகுபதம் .

பொன்னன் , ஊணன் , அற்று , இற்று , எற்று என்பன உடன்பாட்டுக் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் .

கரிய , பெரிய என்பன உடன்பாட்டுக் குறிப்புவினைப் பெயரெச்சப் பகுபதம் .

பைய, மெல்ல என்பன உடன்பாட்டுக் குறிப்புவினை வினையெச்சப் பகுபதம் .

அல்லன் , இல்லன் , அன்று , இன்று என்பன எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் .

அல்லாத , இல்லாத என்பன எதிர்மறைக் குறிப்புவினைப் பெயரெச்சப் பகுபதம் .

அன்றி , இன்றி , அல்லாமல் , இல்லாமல் என்பன எதிர்மறைக் குறிப்புவினை வினையெச்சப் பகுபதம் .

நடந்தான் , நடந்தவன் என்பன குறிப்பு வினையாலணையும் பெயர்ப் பகுபதம் .

பொன்னன் , பொன்னவன் என்பன குறிப்பு வினையாலணையும் பெயர்ப் பகுபதம் .

பெயர்ப் பகுபதம் பகுதி விகுதி இரண்டிலும் பொருட் சிறப்புடையதாய்க் காலம் கொள்ளாது வேற்றுமை உருபு ஏற்று வரும் .

வினைக் குறிப்பு முற்றுப் பகுபதம் பகுதியில் பொருட் சிறப்புடையதாய்க் காலத்தைக் குறிப்பாகக் காட்டி வேற்றுமைஉருபு ஏலாது வரும்.

வினைக் குறிப்புமுற்றால் அணையும் பெயர்ப் பகுபதம் விகுதியில் பொருட் சிறப்புடையதாய்க் காலத்தைக் குறிப்பாகக் காட்டி வேற்றுமை உருபு ஏற்று வரும் .

இவையே இம் மூன்றுக்கும் வேறுபாடாம் .

பொன்னனை வணங்கினான்
சாத்தன் பண்டு பொன்னன்
பண்டு பொன்னனைக் கொணர்ந்தேன்

என வரும்.

தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் பகுதியிற் பொருட் சிறப்புடையதாய்க் காலத்தை வெளிப்படையாகக் காட்டி வேற்றுமை உருபு ஏலாது வரும் ; தெரிநிலை வினையாலணையும் பெயர்ப் பகுபதம் விகுதியில் பொருட் சிறப்புடையதாய்க் காலத்தை வெளிப்படையாகக் காட்டி வேற்றுமை உருபு ஏற்று வரும் . இவையே இவ் இரண்டிற்கும் வேறுபாடாம் .

சாத்தன் நடந்தான் , நடந்தானைத் தடுத்தேன்
என வரும் .

எல்லாச் சொற்களையும் கூறுங்கால் பொருள் சிறக்குமிடத்து எழுத்தை எடுத்தும் , அயலெழுத்தை நலிந்தும் , மற்றை எழுத்துக்களைப் படுத்தும் கூறுக .

மேற்கூறிய பெயர்ப் பகுபதங்களுள் அடங்காது வேறாய் வருவனவும் சில உள. அவை தொழிற்பெயரும் , பண்புப்பெயரும் , பிற பெயருமாம் .

நடத்தல் , வருதல் , உண்டல் , சேறல்
எனவும் ,
செம்மை, கருமை
எனவும் ,
சோர்ந்தார்க்கொல்லி , உடுக்கை
எனவும் வரும் .