பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்று மெய் வலி வரின் இயல்பு ஆம் - பொதுப் பெயர்களுக்கும் உயர் திணைப் பெயர்களுக்கும் ஈற்றிலுள்ள மெய்கள் வல்லெழுத்து முதல் மொழிகள் வரின் இயல்பாகும் , ஆவி ய ர முன் வன்மை மிகா - உயிரையும் யகர ரகர மெய்களையும் ஈறாகவுடைய அவ்விருவகைப் பெயர்களுக்கும் முன் வரும் வல்லெழுத்துக்கள் மிகாவாம் , உயர் திணை சில விகாரம் ஆம் - மெய்யீறும் உயிரீறுமாகிய உயர்திணைப் பெயர்களுள் சில பெயர்கள் நாற்கணங்களோடும் புணரும் இடத்து நிலைமொழி வருமொழிகள் விகாரப்படுதலும் உடையனவாம் . பொதுப்பெயராவது உயர்திணை அஃறிணை இரண்டுக்கும் பொதுவாய் வரும் பெயர் . பொதுப்பெயர் விரவுப்பெயர் என்பன ஒரு பொருள் சொற்கள் . உயர்திணை அஃறிணை இரண்டினும் விரவுதலுடைய பெயர் விரவுப் பெயர் . விரவுதல் - கலத்தல் . நாற்கணமாவன : - வன்கனம் , மென்கணம் , இடைக்கணம் , உயிர்க்கணம் என்பனவாம் . நிலைமொழிச் செய்கையாய்த் திரிதற்குரிய எழுத்துக்கள் திரியாது இயல்பாதலும் , வருமொழிச் செய்கையாய் மிகுதற்குரிய எழுத்துக்கள் மிகாது இயல்பாதலும் கருதி , ஈற்றுமெய் இயல்பாம் என்றும் , வன்மை மிகா என்றும் பகுத்து ஓதினார் . உயிர்போல வருமொழிச் செய்கையாய் வன்மை மிகுதற்கு உரியனவாகிய ய ர ழக்கள் மூன்றினுள்ளும் ழகரம் , பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்களுக்கு ஈறாகாமையால் , இங்கே ஒழிக்கப்பட்டது . 1.சாத்தன் , கொற்றன் , ஆண் இவற்றின் முன் குறிது , சிறிது , தீது , பெரிது , குறியன் , சிறியன் , தீயன் , பெரியன் ; கை , செவி , தலை , புறம் இவற்றை வருவித்து , சாத்தன்குறிது ' சாத்தன்குறியன் , சாத்தன்கை என முறையே கூட்டிப் பொதுபெயர் ஈற்று னகர ணகர மெய் இரு வழியும் இயல்பாதல் காண்க . ஊரன் , அவன் இவற்றின் முன் குறியன் , சிறியன் , தீயன் பெரியன் ; கை , செவி , தலை , புறம் இவற்றை வருவித்து , ஊரன்குறியன் , ஊரன்கை என முறையே கூட்டி , உயர்திணைப் பெயர்ஈற்று னகர மெய் இருவழியும் இயல்பாதல் காண்க . தோன்றல் வேள் இவற்றின் முன் குறியன் , சிறியன் , பெரியன் ; கை , செவி , தலை , புறம் இவற்றை வருவித்து , தோன்றல்குறியன் , தோன்றல்கை என முறையே கூட்டி உயர் திணைப் பெயர்ஈற்று லகர ள கர மெய் இரு வழியும் இயல்பாதல் காண்க . தோன்றல் + தீயன் = தோன்றறீயன் , தோன்றல் + தலை = தோன்றறலை எனவும் ,வேள் + தீயன் = வேடீயன் , வேள் + தலை = வேடலை எனவும் , லகர ளகர மெய் தகரம் வருமிடத்துக் கெடுதல் மயக்க விதி இன்மைப்பற்றி என்றறிக . 2.சாத்தி , கொற்றி , தாய் இவற்றின் முன் குறிது , சிறிது , தீது , பெரிது ; குறியள் , சிறியள் ,தீயள் , பெரியள் ; கே , செவி , தலை , புறம் இவற்றை வருவித்து , சாத்திகுறிது , சாத்திகுறியள் , சாத்திகை என முறையே கூட்டிப் பொதுப்பெயர் ஈற்று உயிர் யகர முன் வலி இருவழியும் இயல்பாதல் காண்க . நம்பி , விடலை இவற்றின் முன் , குறியன் , சிறியன் தீயன் , பெரியன் , கை , செவி . தலை , புறம் இவற்றையும் , அவர் ஒருவர் இவற்றின் முன் , குறியர், சிறியர் , தீயர் , பெரியர் , கை , செவி , தலை , புறம் இவற்றையும் வருவித்து , நம்பிகுறியன் நம்பிகை , அவர்குறியர் , அவர்கை என முறையே கூட்டி , உயர்திணைப் பெயர்ஈற்று உயிர் ரகரமுன் வலி இருவழியும் இயல்பாதல் காண்க . 3.கபிலன் + பரணன் = கபிலபரணர் , வடுகன் + நாதன் = வடுகநாதன் , அரசன் + வள்ளல் = அரசவள்ளல் , இவை ஈறு கெட்டு இயல்பாய் முடிந்தன . ஆசீவகர் + பள்ளி = ஆசீவகப்பள்ளி , வாணிகர் + தெரு = வாணிகத்தெரு ; இவை ஈறு கெட்டு , வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிந்தன . குமரன் + கோட்டம் = குமரகோட்டம் , குமரக்கோட்டம் , வாசுதேவன் + கோட்டம் = வாசுதேவகோட்டம் , வாசுதேவக் கோட்டம் ; இவை ஈறு கெட்டு , வருமொழி வல்லெழுத்து இயல்பாயும் மிக்கும் முடிந்தது . பார்ப்பான் + கன்னி = பார்ப்பனக்கன்னி - இது ஈற்றயல் குறுகி , அகரச்சாரியைப் பெற்று , வருமொழி வல்லெழுத்து மிக்கும் முடிந்தது. வேளாளன் + பிள்ளை = வேளாண்பிள்ளை என நிலைமொழி ஈற்று அன் கெட்டு ளகரமெய் ணகர மெய்யா கத் திரிந்து முடிந்தது . மக்கள் + பண்பு = மக்கட் பண்பு ; மக்கள் + சுட்டு = மக்கட்சுட்டு என நிலைமொழி ஈற்று மெய்திரிந்து முடிந்தது .
|