பொருள் முதல் ஆறோடு = பொருள் இடம்காலம் , சினை , குணம் தொழில் என்னும் ஆறுடனே, அளவை = இவற்றின் பகுதியவாகிய நால்வகை அளவையும், சொல் =சொல்லும், தானி = தானியும் , கருவி = காரணமும் ,காரியம் = காரியமும், கருத்தன் = வினை முதலும், ஆதியுள் = ஆதியாக வரும் பொருள்களுள், ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிறிதை = ஒரு பொருளினது இயற்பெயரால் அப்பொருளினுக்கு இயைந்த பிறிது ஒரு பொருளை, தொன்முறை உரைப்பன ஆகுபெயர் - தொன்று தொட்டுவரும் முறையே சொல்லப்பட்டு வருவன ஆகுபெயர்களாம். 1.தாமரை புரையுங் காமர்சேவடி என்புழி , தாமரை என்னும் முதற்பொருளின் பெயர்அதன் சினைப்பொருளாகிய மலருக்கு ஆதலால் பொருள் ஆகுபெயர். 2.அகனமர்ந்து செய்யாளுறையும் என்புழி,அகம் என்னும் உள் இடப்பெயர் அங்கு இருக்கின்ற மனத்திற்கு ஆதலால் இட ஆகுபெயர். 3.காரறுத்தது என்புழி, கார் என்னும் மழைக்காலப் பெயர் அக்காலத்து விளையும் பயிருக்கு ஆதலால் காலவாகு பெயர். 4.வெற்றிலை நாட்டான் என்புழி, வெற்றிலை என்னும் சினைப்பெயர் அதன் முதலாகிய கொடிக்கு ஆதலால் சினையாகு பெயர். 5.நீலஞ்சூடினாள் என்புழி , நீலம் என்னும் நிறக்குணப்பெயர் அதனையுடைய குவளை மலருக்கு ஆதலால் குணவாகுபெயர். 6.வற்றலோடு உண்டான் என்புழி, வற்றல் என்னும் தொழிற்பெயர் அதனைப் பொருந்திய உணவிற்கு ஆதலால் தொழிலாகுபெயர். 7.காலாலே நடந்தான் என்புழி, கால் என்னும் எண்ணல் அளவைப்பெயர் அவ் அளவைக் கொண்ட உறுப்பிற்கு ஆதலால் எண்ணலளவை ஆகுபெயர். இரண்டுவீசை தந்தான் என்புழி, வீசை என்னும் எடுத்தல் அளவைப்பெயர் அவ் அளவைக்கொண்ட பொருட்கு ஆதலால் எடுத்தலளவை ஆகுபெயர். நாழியுடைந்தது என்புழி, நாழி என்னும் முகத்தல் அளவைப்பெயர் அவ் அளவு கருவிக்கு ஆதலால் முகத்தலளனவு ஆகுபெயர். கீழைத்தடி விளைந்தது என்புழித், தடி என்னும் நீட்டல் அளவைப்பெயர் அதனால் அளக்கப்பட்ட கழனிக்கு ஆதலால் நீட்டலளவை ஆகுபெயர். 8.இந்நூற்கு உரை செய்தான் என்புழி, உரை என்னும் சொல்லின்பெயர் அதன் பொருளுக்கு ஆதலால் சொல்லாகுபெயர். 9.விளக்கு முரிந்தது என்புழி, விளக்கு என்னும் தானியின்பெயர் அதற்குத் தானமாகிய தண்டிற்கு ஆதலால் தானியாகுபெயர். [விளக்கு = விளக்கும் ஒழியை உடைய பிழம்பு. தானி = தானத்தை உடையது. தானம் = இடம்.] 10.திருவாசகம் என்புழி, அடை அடுத்த வாசகம் என்னும் முதல்கருவியின் பெயர் , அதன் காரியமாகிய ஒரு நூலிற்கு ஆதலால் கருவியாகுபெயர். 11.இந்நூல் அலங்காரம் என்புழி,அலங்காரம் என்னும் காரியத்தின் பெயர் அதனை உணர்த்துதற்குக் கருவியாகிய நூலிற்கு ஆதலால் காரியவாகுபெயர். 12.இந்நூல் திருவள்ளுவர் என்புழி திருவள்ளுவர் என்னும் கருத்தாவின் பெயர் அவரால் செய்யப்பட்ட நூலிற்கு ஆதலால் கருத்தாவாகுபெயர். ஆதி என்றதனால், காளை வந்தான், பாவை வந்தாள் என வரும் உவமை ஆகுபெயர் முதலானவையும், தேவர் முதலியோர் பெயரை மக்களுக்கு இட்டு வழங்குவனவும் கொள்க. இன்னும், இவ்ஆகுபெயர், விடாத ஆகுபெயர், விட்ட ஆகுபெயர் எனவும், இருமடி ஆகுபெயர், மும்மடி ஆகுபெயர், நான்மடி ஆகுபெயர் எனவும், அடையடுத்த ஆகுபெயர் எனவும், இருபெயரொட்டு ஆகுபெயர் எனவும் பெயர்பெற்று வழங்கும். 1. கடுத் தின்றான் , புளி தின்றான் என்புழிக்,கடுவும் புளியும்,சுவையாகிய தத்தம் பொருளை விடாது நின்று தம்பொருளின் வேறு அல்லாத காய்கனி என்னும் பொருளை உணர்த்தலால், விடாத ஆகு பெயர்.அவ்வூர் வந்தது என்புழி , ஊர் என்பது, இடமாகிய தன் பொருளைவிட்டுத் , தன்னிடத்துள்ள மனிதரை உணர்த்தலால் விட்ட ஆகுபெயர். 2.புளி தின்றான் என்புழிப் , புளி என்னும் சுவைப்பெயர் அதனை உடைய பழத்திற்கு ஆதலால் ஆகுபெயர் . புளி முளைத்தது என்புழி புளி என்பது, சுவைப்பெயர் பழத்திற்கு ஆய்ப், பழத்தின்பெயர் மரத்திற்கு ஆதலால் , இருமடி ஆகுபெயர் 'கார் நிகர் வண்கை' என்புழிக், கார் என்னும் நிறப்பெயர் அதனையுடைய மேகத்திற்கு ஆதலால் ஆகுபெயர். 'கார் வந்தது' என்புழிக்,கார் என்பது,நிறப்பெயர் மேகத்திற்காய், மேகத்தின்பெயர் அது பெய்யும் பருவத்திற்கு ஆதலால் இருமடி ஆகுபெயர். கார் அறுத்தது என்புழிக், கார் என்பது நிறப்பெயர் மேகத்திற்காய் , மேகத்தின் பெயர் பருவத்திற்காய், அப்பருவத்தின் பெயர் அதில் விளையும் பயிருக்கு ஆதலால், மும்மடி ஆகுபெயர்.நான்மடி ஆகுபெயர் வந்தவழிக் கண்டுகொள்க. 3. வெற்றிலை நட்டான், மருக்கொழுந்து நட்டான், அறுபதம் முரலும் என்புழி, இலை,கொழுந்து, பதம் என்னும் சினைப்பெயர்கள், முறையே வெறுமை, மரு, ஆறு என்னும் அடை அடுத்து, முதற்பொருள்களுக்கு ஆதலால், அடையடுத்த ஆகுபெயர். 4. வகரக்கிளவி, மக்கட்சுட்டு என்பன ஒரு பொருட்கு இருபெயர் ஒட்டி நிற்க, அவற்றுள் ஒருபெயர் ஆகுபெயராக நிற்றலால், இருபெயர் ஒட்டாகுபெயர், வகரக்கிளவி என்பதில் கிளவிஎன்பது சொல்லை உணர்த்தும்போது இயற்பெயர்; சொற்குக் கருவி ஆகிய எழுத்தை உணர்த்தும்போது ஆகுபெயர். வகரக்கிளவி வகரமாகிய எழுத்து எனப் பொருள்படும். மக்கட் சுட்டு என்பதில் சுட்டு என்பது நன்கு மதிப்பை உணர்த்தும்போது இயற்பெயர்; நன்கு மதிக்கபடுதலை உடைய பொருளை உணர்த்தும்போது ஆகுபெயர். மக்கட்சுட்டு மக்களாகிய நன்கு மதிக்கப்படுபொருள் எனப் பொருள்படும். வெற்றிலை முதலியனவற்றைப் பொற்றொடி முதலியனபோல அன்மொழித்தொகைப் பெயர் என்று கொள்ளலாகாதோ எனின் :- அன்மொழித்தொகைப் பெயர் , செய்யுள் செய்யும் புலவன் ஒருவரை வியப்பு முதலிய காரணத்தினாலே தன் கூற்றாகவேனும் பிறர் கூற்றாகவேனும் பாடும் இடத்து அங்கங்கே வருவது அன்றி ஆகுபெயர் போல நியதிப்பெயராய் வருவது அன்று; ஆதலால் ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் ஒன்று எனக் கொள்ளலாகாதது. அங்ஙனமாயினும், ஆகுபெயரும் அன்மொழித் தொகைப்பெயரும் தம் பொருள் உணர்த்தாது பிறிது பொருள் உணர்த்துதாலால் ஒக்குமாதலின், அவை தம்முள் வேற்றுமையாதோ எனின் :- ஆகுபெயர் ஒன்றன் பெயரால் அதனோடு இயைபு பற்றிய பிறிது ஒன்றை உணர்த்தி ஒருமொழியிடத்து வருவதாம்; அன்மொழித் தொகை இயைபு வேண்டாது இருமொழியும் தொக்க தொகை ஆற்றலினாலே பிறிது பொருள் உணர்த்தி இரு மொழியிடத்து வருவதாம்; இவை தம்முள் வேற்றுமை என்க. 'இருபெயர் ஒட்டாகுபெயர் இருமொழியிடத்து வந்தது அன்றோ எனின் :- வகரக்கிளவி , மக்கட்சுட்டு என்னும் இருபெயர் ஒட்டாகு பெயர்களுள், வகரமும் மக்களும் ஆகிய அடைமொழிகள், கிளவி, சுட்டு என்னும் இயற்பெயர்ப் பொருளை விசேடித்து நில்லாது, எழுத்தும் பொருளும் ஆகிய ஆகுபெயர்ப் பொருளை விசேடித்து நிற்கக் , கிளவி , சுட்டு என்பனவே ஆகுபெயர் பொருளை உணர்த்த, இருபெயரும் ஒட்டி நிற்கும்; ஆதலால் இருபெயர் ஒட்டாகுபெயர் இருமொழி இடத்து வந்தது அன்று என்க.இனிப் 'பொற்றொடி' என்னும் அன்மொழித்தொகையிலே. பொன் என்னும் அடைமொழி, அப்படி அன்மொழித்தொகைப் பொருளாகிய பெண்ணை விசேடித்து நில்லாது, தொடியையே விசேடித்து நிற்க , அவ் இருமொழியும் தொக்க தொகை ஆற்றலினாலே அன்மொழித்தொகைப் பொருளை உணர்த்துதலும் அறிக. இக்கருத்தே பற்றி மக்கட்சுட்டு முதலியவற்றைப் பின்மொழி ஆகுபெயர் என்பாரும் உளர். 33
|