பொருள் முதல் ஆறினும் தோற்றி = பொருளாதியாறும் முதனிலையடியாக அவற்றிடத்தே பிறந்து , முன் ஆறனுள் வினைமுதல் மாத்திரை விளக்கல் = முன் சொல்லப்பட்ட செய்பவன் முதலாகிய ஆறனுள் கருத்தா ஒன்றையுமே விளக்குதல் , வினைக் குறிப்பு = வினைக் குறிப்புச் சொல்லின் இலக்கணமாம் . குழையினன் , பொன்னினன் எனவும் , அகத்தினன் புறத்தினன் எனவும் , ஆதிரையான் , ஓணத்தான் எனவும் , குறுந்தாளன் , செங்கண்ணன் எனவும் , கரியன் , நல்லன் எனவும் , கடுநடையன், இன்சொல்லன் எனவும் வரும் . இவற்றுள் , விகுதியால் செய்பவன் விளங்கிற்று ; மற்றவைகள் , குறிப்பாக உண்டெனக் கொள்க . ஒன்றைக் குழையினன் , ஒன்றாற் குழையினன் என வாராமையால் , குழையினன் என்பதற்குக் கருவியும் செயப்படு பொருளும் இல்லை எனவும் , ஒன்றை உடையன் ஒன்றால் உடையன் என வருதலால் , உடையன் என்பதற்கு ஆறும் உண்டெனவும் கொள்க. இவை , பொருள் ஆதி ஆறால் ஒருபொருளை வழங்குதற்கு வரும் பெயராய் நில்லாது குழையையுடையன் ஆயினான் , ஆகின்றான் , ஆவான் எனவும் . அகத்தின்கண் இருந்தான் , இருக்கின்றான் , இருப்பான் எனவும் , ஆதிரைநாளிற் பிறந்தான் , பிறக்கின்றான் , பிறப்பான் எனவும் , குறுந்தாளையுடையன் ஆயினான் , ஆகின்றான் , ஆவான் எனவும் , கருவண்ணமாய் இருந்தான் , இருக்கின்றான் , இருப்பான் எனவும் , கடுநடையாக நடந்தான் , நடக்கின்றான் , நடப்பான் எனவும் வருதலால் , வினைக்குறிப்புச் சொல்லாயின . இவை , முன்பு வினைக்குறிப்பாய்ப் பின்பு பொருள்களை வழங்குதற்கு உரிய பெயராய் வரின் , அவை குறிப்பு வினையாலணையும்பெயராம் . இவை தம்முள் வேற்றுமை என்க .
|