பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும்= திணை பால் இடங்கட்குப் பொதுவாகிய பெயர் வினைகளுடைய பொதுத்தன்மையை நீக்கி ஒன்றற்கு உரிமை செய்யும் , மேல் வரும் சிறப்புப் பெயர்வினை தாமே = மேலேவரும் சிறப்பாகிய பெயர் வினைகள் தாமே. ஒன்றற்கு முன் பின் என்னும் இருமருங்கும் மேல் எனப்படுதலால், சிறப்புப் பெயர் வினை எவ்விடத்து வரினும் கொள்க. 1. சாத்தனிவன், சாத்தனிது எனவும் , சாத்தன் வந்தான, சாத்தன்வந்தது எனவும், பெயர்த் திணைப் பொதுமையைப், பின் வந்த சிறப்புப் பெயரும் வினையும், நீக்கி ஒரு திணையை உணர்த்தின. 2. ஒருவர் என்ஐயர்; ஒருவர் என்தாயர் எனவும், மரம் வளர்ந்தது, மரம் வளர்ந்தன எனவும், பெயர்ப்பால் பொதுமையைப், பின் வந்த சிறப்புப் பெயரும் வினையும், நீக்கி ஒருபாலை உணர்த்தின. 3. யாமெல்லாம் வருவம், நீயிரெல்லாம் போமின், அவரெல்லாம் இருந்தார் எனப் பெயரிடப் பொதுமையை முன் வந்த சிறப்புப் பெயரும், பின் வந்த சிறப்பு வினையும், நீக்கி ஒவ்வோர் இடத்தை உணர்த்தின. 4. வாழ்க அவன், அவள், அவர் ,அது, அவை, யான், யாம், நீ, நீர் என வினைத் திணை பால் இடப் பொதுமையைப், பின் வந்த சிறப்புப்பெயர்கள், நீக்கி ஒருதிணையையும் பாலையும் இடத்தையும் உணர்த்தின. பிறவும் அன்ன. 8
|