பொதுப்பாயிரம்

நூலினது வரலாறு
எழு மதம்

 
11எழுவகை மதமே யுடன்படன், மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
தாஅ னாட்டித் தனாது நிறுப்பே
இருவர் மாறுகோ ளொருதலை துணிவே .
பிறர்நூற் குற்றங் காட்ட லேனைப்
பிறிதொடு படாஅன் றன்மதங் கொளலே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
எழு வகை மதம் - எழு வகை மதமாவன , உடன் படல் - பிறர் மதத்திற்குத் தான் உடன் படுதலும் , மறுத்தல் - பிறர் மதத்தை மறுத்தலும் , பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவு - பிறர் மதத்திற்கு உடன்பட்டுப் பின்பு மறுத்தலும் , தான் நாட்டித் தனது நிறுப்பு - தானே ஒரு பொருளை எடுத்து நாட்டி அதனை வரும் இடந்தோறும் நிறுத்துதலும் , இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு - இருவரால் விரோதமாகக் கொள்ளப்பட்ட இரண்டனுள் ஒன்றனிடத்துத் துணிதலும் , பிறர்நூல் குற்றங் காட்டல் - பிறர் நூலிலுள்ள குற்றத்தை எடுத்துக் காட்டுதலும், பிறிதொடு படாஅன் தன் மதம் கொளல் - பிறர் மதத்திற்கு உடன்படான் ஆகித் தன் மதத்தையே கொள்ளுதலுமாம் .