எகர வினா (முன்னர்) முச்சுட்டின் முன்னர் - எகர வினா இடைச்சொல்லின் முன்னும் மூன்று சுட்டிடைச் சொல்லின் முன்னும் , உயிரும் யகரமும் எய்தின் வவ்வும் - உயிரும் யகரமும் வரின் அவையும் - யகர மொழிந்த மெய்கள் வரின் அவ்வந்த மெய்களும் , தூக்கில் சுட்டு நீண்டு வருமிடத்து யகரமும் , தோன்றுதல் நெறி - மிகுதல் முறையாம். 1. எவ் வணி, எவ் யானை; அவ் வணி , அவ் யானை. இவ் வணி, இவ் யானை; உவ்வணி , உவ் யானை என எகர வினா முச்சுட்டின் முன் உயிரும் யகரமும் வர , வகரம் தோன்றுதல் காண்க. 2. எக் குதிரை , எச் சேனை , எத் தண்டு , எப் படை , எஞ் ஞாலம் , எந் நாடு , எம் மனை , எவ் வளை , எங்ஙனம் என யகர மொழிந்த மெய்கள் வர , அவ்வந்த மெய்கள் தோன்றுதல் காண்க . ஒழிந்த மூன்று சுட்டுக்களோடும் இப்படியே கூட்டுக. உயிர் வந்த வழித் தோன்றிய வகர மெய் இரட்டுதல் " தனிக்குறின் முன்னொற்று " ( சூ 205 ) என்னும் சூத்திரத்தாலும் , இரட்டிய மெய்யின் மேல் வருமொழி முதல் உயிரேறுதல் , " உடன்மே லுயிர் " ( சூ 204 ) என்னும் சூத்திரத் தாலும் பெறப்படும் . 3. ஆ+இடை - " ஆயிடைத்தமிழ் கூறுநல் லுலகத்து " எனச் சுட்டு நீண்ட விடத்து யாகரம் தோன்றுதல் காண்க . நெறி என்றமையால் யாங்ஙனம் என யாவினா முன்னும் , ஆங்ஙனம் , ஈங்ஙனம் , ஊங்ஙனம் என நீண்ட சுட்டின் முன்னும் ஙகர மிகுதலும் , ஈது எனவும் , ஆங்கு , ஈங்கு , ஊங்கு எனவும் ,ஆண்டு , ஈண்டு எனவும் சுட்டுப்பெயர் நீளலும் , " விண்வத்துக் கொட்கும் " எனவும் , " செல்வுழிச் செல்க " எனவும் , " சார்வுழிச் சார்ந்த தகையள் " எனவும் , மெய்யீற்றின் முன் உயிர் வர , இப்படி உடம்படுமெய் அல்லாத வகரம் பெறுதலும் கொள்க . எகர வினா முச்சுட்டின் முன் உயிர் வரின் வகரமும் , நீண்ட சுட்டின் முன் உயிர் வரின் யகரமும் தோன்று மென்றது " இ ஈ ஐ வழி " என்னும் சூத்திரத்தால் எய்தியது விலக்கிய பிறிது விதி வகுத்தல் . யகரம் வரின் வகரமும் , பிற மெய்களுள் ஞ , ந , ம , வ வரின் அவையுந் தோன்று மென்றது " எண்மூ வெழுத்தீற்று " ( சூ 153 ) என்னும் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் .க, ச, த, ப, ங வரின், அவை தோன்றும் என்றது எய்தாதது எய்து வித்தல் .
|