உயிரீற்றுப் புணரியல்

குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி

 
188எண்ணிறை யளவும் பிறவு மெய்தின்
ஒன்று முதலெட் டீறா மெண்ணுண்
முதலீ ரெண்முத னீளு மூன்றா
றேழ்குறு கும்மா றேழல் லவற்றின்
ஈற்றுயிர் மெய்யு மேழ னுயிரும்
ஏகு மேற்புழி யென்மனார் புலவர் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
எண் நிறை அளவும் பிறவும் எய்தின் - எண்ணுப் பெயரும் , நிறைப்பெயரும் , அளவுப்பெயரும் பிற பெயர்களும் வரின் , ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண்ணுள் - நிலை மொழியாக நின்ற ஒன்று முதல் எட்டு ஈறாகும் எண்களுள் , முதல் ஈரெண் முதல் நீளும் - முதலிலுள்ள இரண்டு எண்களும் முதல் குறில் நீளும் , மூன்று ஆறு ஏழ்(முதல் ) குறுகும் - மூன்றும் ஆறும் ஏழும் முதல் நெடில் குறுகும் , ஆறு ஏழு அல்லவற்றின் ஈற்று உயிர்மெய்யும் ஏழன் (ஈற்று) உயிரும் ஏகும் - ஆறும் ஏழும் அல்லாத ஆறு எண்களினுடைய இறுதியிலுள்ள உயிர்மெய்களும் ஏழனுடைய இறுதியிலுள்ள உயிரும் கெடும் , ஏற்புழி என்மனார் புலவர் = ஏற்கும் இடங்களில் என்று சொல்லுவர் புலவர் .

இச்சூத்திரத்துள் கூறிய விகாரமும் , இப்புணர்ச்சி முற்ற முடித்தற்குப் பின் ஐந்து சூத்திரத்தால் கூறும் விகாரமும் , பண்புத்தொகைக்கே உரியனவாம் .

ஏற்புழி என்றதனால் , முதலிரண்டு எண்ணும் முதல் நீள்வது உயிர் வரும் வழி எனவும் , மெய் வரும் வழி நீளா எனவும் , மூன்றும் ஆறும் ஏழும் முதல் குறுகுவது மெய் வரும் வழி எனவும் , உயிர் வரும் வழிக் குறுகா எனவும் . ஆறும் ஏழும் அல்லாதவைகளின் ஈற்உயிர்மெய் கெடுவது நாற் கணமும் வரும் வழி எனவும் , ஏழு என்பதன் ஈற்றுயிர் கெடுவது முதல் , குறுகா வழி எனவும் கொள்க . ஏற்புழி என்பதை இப்பொருண்மை அதிகாரம் முற்றுமளவும் உய்த்துரைத்துக் கொள்க .

ஏழு என்பது , முற்றியலுகர ஈறாயினும் , ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல் என்னும் உத்தியால் இங்கே சொல்லப்பட்டது .

ஆறு + பத்து = அறுபது , அறுகழஞ்சு , அறுநாழி , அறுவட்டி என நெடு முதல் குறுகி முடிந்தது .

ஏழு + பத்து = எழுபது , ஏழுகழஞ்சு , எழுநாழி , எழுவகை என ஏழு நெடு முதல் குறுகி முடிந்தது .

ஏழு + கடல் = ஏழ்கடல் என ஏழன் ஈற்றுயிர் கெட்டது .

ஏழாயிரம் என உயிர் வருமிடத்து உகரம் கெடுதல் ' முற்றுமற் றொரோவழி ' என்பதனால் கொள்க .

மற்றவைகளுக்கு உதாரணம் பின்னே காட்டப் படும் .

இன்னும் , ஏற்புழி என்றதனால் , ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்ணுள் , இரண்டு முதலியன , இரண்டு கழஞ்சு , மூன்று படி , நான்கு பொருள் , ஐந்து பூதம் , ஆறு குணம் , ஏழு கடல் , எட்டுக் கோடி எனப் பொதுவிதியால் முடிதலும் ; ' ஒன்று தேரினானொருவன் கூற்றமே ' எனச் சிறுபான்மை ஒன்றும் அங்ஙனம் முடிதலும் கொள்க.