எல்லாரும் எல்லீரும் என்பவற்று உம்மை தள்ளி = ஆறு உருபும் புணரும் இடத்து எல்லாரும் எல்லீரும் என்னும் இரு பெயர்களினுடைய இறுதியிலுள்ள முற்றும்மைகளைத் தள்ளி , நிரல் தம் நும் சார - முறையே தம்முச் சாரியையும் நும்முச் சாரியையும் அவை இருந்த இடங்களிலே பொருந்த , உம் உருபின் பின்னர்ப் புல்லும் - அவற்றினாலே தள்ளுண்ட முற்றும்மைகள் உருபுகளின் பின்னே வந்து பொருந்தும் . எல்லார்தம்மையும் , எல்லாரையும் எனவும் , எல்லீர் நும்மையும் , எல்லீரையும் எனவும் விகற்பித்து வந்தன . மற்றை உருபுகளோடும் இப்படியே ஒட்டுக . நந்தம்மை , நுந்தம்மை எனப் படர்க்கைக்கு உரிய தம்முச் சாரியை தன்மை முன்னிலைகளில் வருதல் "ஓரிடம் பிறவிடந் தழுவலு முளவே " என்னும் வழுவமைதி .
|