எல்லை இன்னும் அதுவும் பெயர் கொளும் = எல்லைப் பொருட்டாகிய ஐந்தாம் வேற்றுமையும் ஆறாம் வேற்றுமையும் பெயரைக்கொண்டு முடியும் , அல்லவினை கொளும் = ஒழிந்த எழுவாய் முதலிய வேற்றுமைகள் எல்லாம் வினையைக்கொண்டு முடியும் , நான்கு ஏழ் இருமையும் புல்லும் - அவற்றுள் நான்காம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் , வினையையே அன்றி வினையொடு பொருந்தும் பெயரையும்கொண்டு முடியும் , பெரும்பாலும் என்மனார் புலவர் = பெரும்பாலும் என்று சொல்லுவர் புலவர் . பெரும்பாலும் என்றதனால் , வினைகொளற்கு உரியன சிறுபான்மை தொழிற்பெயரையும் வினையாலணையும் பெயரையும் கொண்டு முடிதலும் , அவற்றுள் எழுவாய் வேற்றுமை வினைகொண்டு முடிதலே அன்றிச் சிறுபான்மை பெயரையும் வினாவையும்கொண்டு முடிதலும் கொள்க . 1 . கருவூரின் கிழுக்கு , சாத்தனது கை என எல்லை இன்னும் அதுவும் பெயர் கொண்டன . 2 . சாத்தன் வந்தான் , சாத்தனல்லான் ; குடத்தை வனைந்தான் , குடத்தை உடையன் ; வாளால் வெட்டினான் , வாளால் வலியன் ; சாத்தனுக்குக் கொடுத்தான் , சாத்தனுக்கு நல்லன் ; நோயினீங்கினான் , நோயிற் கொடியன் ; அலையின்கண் இருந்தான் , அவையின்கட் பெரியன் ; கொற்றா கொள் , கொற்றா வலியை என அல்லவை வினைகொண்டன . 3 . பிணிக்கு மருந்து , மணியின்கணொளி என நான்காம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் வினையே அன்றிப் பெயரும் கொண்டன . இப்பெயர்கள் , எல்லை இன்னும் அதுவும் கொள்ளும் பெயர்கள் போலாது , பிணிக்குக் கொடுக்கும் மருந்து , மணியின்கணிருக்கும் ஒளி என வினைவேண்டி நிற்றலின் , வினையொடு பொருந்தும் பெயர்கள் ஆயின . 4. சாத்தன் வருதல், சாத்தன் வந்தவன்; குடத்தை வனைதல், குடத்தை வனைந்தவன் எனச் சிறுபான்மை தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் கொண்டன; பிறவும் அன்ன. 5. சாத்தனவன், சாத்தன் யாவன், சாத்தன் யார் என எழுவாய் வேற்றுமை சிறுபான்மை சுட்டுப்பெயரும் வினாப்பெயரும் வினா வினைக்குறிப்பும் கொண்டது. எட்டு வேற்றுமைகளுள், எட்டாவதும் ஆறாவதும் ஒழிந்த ஆறு வேற்றுமைப் பொருள்களும் வினை கொண்டு முடியிற் காரகம் எனப் பெயர்பெறும். ஆறாவதும் , வினைப்பெயர்கொள்ளின் , அப்பெயர் பெறும். சூத்திரம் : "விளிகுறை யிரண்டையும் விட்டவேற்றுமைகள் வினையான் முடியிற் காரக மெனப்பெறுங் குறையும் வினைகொளி னொரோவழிக் கூடும் நாராயணன்பூ வோரா யிரத்தைக் கரத்தாற் கொய்தோ ரரற்கே கொடுத்துச் சக்கரச் சிறுமையி நீங்கி நற்சுவைப் பாற்கடற் கண்ணே பள்ளிகொண்டானெக் காரக முழுவதும் வந்தன காண்க. இவற்றினுள் ஒன்றே இயும்பினும் காரகம்." பெயரியல் முற்றிற்று.
|