எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் எனும் நான்கு அளவையுள் = எண்ணல் அளவை எடுத்தல் அளவை முகத்தல் அளவை நீட்டல் அளவை என்னும் நால்வகை அளவைகளால் பொருள்களை அளக்கும் இடத்துத் தொடரும் அவ் அளவைப் பெயர்களுள் , உம் இலது அத்தொகை = உம்மை ஆகிய உருபுதொக்கு நிற்பவை அவ் உம்மைத் தொகைகளாம். ஒன்றே கால், கபில பரணர் ------ எண்ணல் உம்மைத்தொகை. கழஞ்சே கால், தொடியே கஃசு ------ எடுத்தல் உம்மைத்தொகை. கலனே தூணி, நாழி ஆழாக்கு ------ முகத்தல் உம்மைத் தொகை. சாணங்குலம், சாணரை ------ நீட்டல் உம்மைத்தொகை. சேரசோழ பாண்டியர், புலி வில் கெண்டை ------ பன்மொழித்தொகை. இவை, விரியும் இடத்து, ஒன்றுங்காலும், கழஞ்சுங்காலும், கலனுந்தூணியும், சாணும் அங்குலமும்,சேரனுஞ் சோழனும் பாண்டியனும் என விரியும். கபில பரணர்ப் பரவினான் என வரும்வழிக் கபிலனையும் பரணனையும் பரவினான் என வேற்றுமை உருபும் உடன் விரியும் அன்றோ எனின் , பரவினான் என்னும் வருமொழி நோக்கி வேற்றுமைத் தொகையாகவும், கபில பரணர் என்னும் நிலைமொழி இரண்டையு நோக்கி உம்மைத் தொகையாகவும் கொள்ளப்படும் என்க.
|