பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
மரபு வழா நிலை

 
391எழுத்திய றிரியாப் பொருடிரி புணர்மொழி
இசைத்திரி பாற்றெளி வெய்து மென்ப.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
எழுத்து இயல் திரியாப் பொருள் திரி புணர் மொழி = எழுத்தினது தன்மை வேறுபடாது பொருள் வேறுபட்டுச் சொல்லும் பொருளும் ஐயுற நிற்கும் தொடர்மொழிகள் , இசைத் திரிபால் தெளிவு எய்தும் என்ப- குறிக்கப்பட்ட சொற்களின் இறுதியும் முதலும் தோன்ற இசையறுத்துச் சொல்லும் வேறுபாட்டினாலே துணியப்படும் என்று சொல்லுவர் புலவர்.

எனவே, அவ்வாறு இசையறுத்துக் கூறுதல் மரபு என்பதாயிற்று.

செம்பொன்பதின்றொடி, நாகன்றேவன்போத்து, குன்றேறாமா, குறும்பரம்பு என வரும். இவை செம்பொன் - பதின் தொடி என இசையறுத்துக் கூறின், செம்பொன் பத்துப்பலம் எனவும், செம் - பொன்பதின்தொடி என இசையறுத்துக் கூறின் செம்பு ஒன்பது பலம் எனவும், நாகன் - றேவன் - போத்து என இசையறுத்துக் கூறின், நாகனும் தேவனும் போத்தும் எனவும். நாகன்றே- வன்போத்து என இசையறுத்துக் கூறின், இளம்பெண் எருமையன்று முதிர்ந்த எருமைக்கடா எனவும்,குன்றேறா - மா என இசையறுத்துக் கூறின், குன்றின்மேல் ஏறாத விலங்கு எனவும், குன்றே - றாமா என இசையறுத்துக் கூறின். குன்றின்மேல் ஏறுங் காட்டுப்பசு எனவும். குறும்ப - ரம்பு என இசையறுத்துக் கூறின், குறுநில மன்னருடைய அம்பு எனவும், குறும் - பரம்பு என இசையறுத்துக்கூறின், குறுமையாகிய கழனி திருத்தும் பலகை எனவும் பொருள்துணியக் கிடந்தமை காண்க.

40