எண் - எழுத்தின் எண்ணும் , பெயர் - பெயரும் , முறை - முறையும் , பிறப்பு - பிறப்பும் , உருவம் - வடிவமும் , மாத்திரை - அளவும் , முதல் ( நிலை ) - முதல்நிலையும் , ஈறு ( நிலை ) - கடை நிலையும் , இடை ( நிலை ) - இடை நிலையும் , போலி - போலியும் , பதம் - பதமும் , புணர்பு - புணர்ச்சியும் , எனப் பன்னிருபாற்று - என்று பன்னிரு பகுதியினை உடைத்தாகும் , அது - அவ் வெழுத்திலக்கணம் . இச் சூத்திரம் தொகுத்துச் சுட்டல் என்னும் உத்தி , மேல் வருவன எல்லாம் வகுத்துக் காட்டல். இப் பன்னிரு பகுதியுள்ளும் , எண் முதலிய பத்தும் எழுத்தின் அகத்திலக்கணம் . பதம் புணர்பு என்னும் இரண்டும் புறத்திலக்கணம் என்பது தோன்ற என்றா என்னும் எண்ணிடைச் சொல் கொடுத்துப் பிரித்து ஓதினார் . எழுத்தின் அகத்திலக்கணம் பத்தையும் எழுத்தியல் என ஓர் இயலாகவும் புறத்திலக்கணம் இரண்டனுள் அவ் எழுத்தாலாம் பதத்தைப் பதவியல் என ஓர் இயலாகவும் அப் பதம் புணரும் புணர்ப்பை உயிரீற்றுப் புணரியல் , மெய்யீற்றுப் புணரியல் , உருபு புணரியல் என மூன்று இயலாகவும் ஓத்து முறைவைப் பென்னும் உத்தியால் வைத்தார் .
|