| எ யா முதலும் - எகரமும் யாவும் மொழிக்கு முதலிலும் , ஆ ஓ ஈற்றும் - ஆகாரமும் ஓகாரமும் மொழிக்கு இறுதியிலும் , ஏ இரு வழியும் - ஏகாரம் இவ் இரண்டிடத்திலும் , ( தனி வரின் ) வினா ஆகும் - தனித்து வினாப் பொருளைக் காட்டவரின் வினா எழுத்தாம் . மேலைச் சூத்திரத்திலே 'தனிவரின்' என்றது இதற்கும் கூட்டப்பட்டது . ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல் என்னும் உத்தியால் உயிர்மெய்யாகிய யா வினாவும் உடன் கூறப்பட்டது . இவை புறத்தும் அகத்தும் வருதல் ஏற்றபடி கொள்க. எக் கொற்றன்? யாங்ஙனம்? என எகரமும் யாவும் முதலிலே புறத்து வந்தன . எவன்? யாவன்? என எகரமும் யாவும் முதலிலே அகத்து வந்தன . கொற்றனா? கொற்றனோ? என ஆகாரமும் ஓகாரமும் ஈற்றிலே புறத்து வந்தன . ஏவன்? கொற்றனே? என ஏகாரம் முதலில் அகத்தும் ஈற்றில் புறத்தும் வந்தது.
|