(இ-ள்) மலர் தலை உலகின் - பரந்த இடத்தையுடைய உலகத்தின் கண்ணே ; மல்கு இருள் அகல-நிறைந்த கண் இருள் கெட ; இலகு ஒளி பரப்பி - விளங்கும் கிரணத்தை விரித்து ; யாவையும் விளக்கும் பரிதியின் - கண்பொறிக்கு விடயமாகிய உருவங்கள் எல்லாவற்றையும் காட்டும் சூரியனைப் போல் ; ஒரு தான் ஆகி - உலகங்களுக்கு எல்லாந் தான் ஒரு முதலேயாகி ; முதல் ஈறு ஒப்புஅளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த - தோற்றமும் ஒடுக்கமும் உவமையும் அளவும் விருப்பும் வெறுப்புமாகிய இவைகளின் இயல்பாகவே நீங்கி நிற்றலினாலே தலைவனாகிய ; அற்புத மூர்த்தி - ஞானமே திருமேனியாக உடையவன் ; தன் அலர்தரு தன்மையின் - தனது மலர்ந்த குணமாகிய கருணையினாலே , மன இருள் இரிய - உயிர்களின் மனத்து இருளாகிய அஞ்ஞானங் கெட ; மாண்பொருள் முழுவதும் - மாட்சிமைப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பொருளையும் ; முனிவுஅற அருளிய விருப்புடன் அருளிச் செய்த ; மூவறு மொழியுளும் பதினெண் நிலத்து மொழிகளுள்ளும் , குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கு எல்லையின் - கிழக்கே கீழ்கடலும் தெற்கே கன்னியாகுமரியும் மேற்கே குடகநாடும் வடக்கே திருவேங்கடமும் என்று சொல்லப்படும் நான்கு எல்லையினையுடைய நிலத்து மொழியாகிய ; இருந்தமிழ்க் கடலுள் - பெரிய தமிழென்னும் கடலுள் ; அரும்பொருள் ஐந்தையும் - அருமையாகிய எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்னும் ஐந்து பொருளையும் ; யாவரும் உணர - இலக்கியப் பயிற்சியில் வலியவரே அன்றி எளியவரும் அறியும் பொருட்டு ; தொகை வகை விரியின் தருக என - தொகுத்தும் விரித்தும் செய்யப்படும் யாப்பினாலே பாடித் தருக வென ; துன்னார் இகல் அறநூறி - பகைவரது பகைமைகெட அவரை அழித்து ; இரு நிலம் முழுவதும் தனது எனக் கோலி-பெரிய பூமி முழுவதையும் தன்னுடையதாகப் பற்றிக் கொண்டு ; தன் மதவாரணம் திசை தொறும் நிறுவிய திறல் உறு-தன் மதயானைகளை எட்டுத் திக்கிலும் திக்குயானைகள்போல நிறுத்திய வெற்றி மிகுந்த ; தொல் சீர் - தொன்று தொட்டு வரும் கீர்த்தியையும் , கருங்கழல் - பெருமை பொருந்திய வீரக் கழலையும் ; வெண்குடை - வெண்கொற்றக் குடையையும் ; கார் நிகர் வண்கை - மேகம் போலுங்கொடையையுடைய கையையும் ; திருந்திய செங்கோல் - கோடாத செங்கோலையும் உடைய , சீய கங்கன் - சிங்கம் போன்ற கங்கன் ; அருங்கலை வினோதன் - அருமையாகிய நூல்களை ஆராய்தலே பொழுதுபோக்கும் விளையாட்டாக உடையவன் ; அமர் ஆபரணன்-போர் செய்தலினாலே தன் மேல்படும் பெரிய காயங்களையே ஆபரணமாக உடையவன் ; மொழிந்தனன் ஆக- சொன்னானாக ; முன்னோர் நூலின் வழியே - தொல்லாசிரியருடைய இலக்கணநூலின் வழியே ; நன்னூற் பெயரின் வகுத்தனன் நன்னூல் என்னும் பெயரினாற் செய்தனன் ; பொன் மதிற் சனகை - பொன் மதிலினாலே சூழப்பட்ட சனகாபுரத்துள் இருக்கும் , சன்மதி முனி அருள் - சன்மதி முனிவன் பெற்ற ; பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி என்னும் நாமத்து - சொல்லுதற்கு அரிய ஞானவொழுக்கச் சிறப்பையும் பவணந்தி யென்னும் பெயரையுமுடைய இருந்தவத்தோன் - பெரிய தவத்தினையுடையோன் . சூரியன் தன் கிரணத்தினாலே புற இருளை அகற்றிக் கண்பொறிக்கு விடயமாகிய உருவங்களை விளக்குதல் போலக் , கடவுள் தன் கருணையினாலே அகவிருளை அகற்றி அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருளையும் விளக்கப்பெற்ற பதினெண்பாடைகளுள்ளும் , கிழக்கே கீழ்கடலும் தெற்கே கன்னியாகுமரியும் மேற்கே குடகநாடும் வடக்கே திருவேங்கடமும் எல்லையாகவுடைய நிலத்து மொழியாகிய தமிழ்ப் பாடையினுள் , எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்னும் ஐந்திலக்கணத்தையும் இலக்கியப் பயிற்சியின் வலியவரேயன்றி எளியவரும் அறியும் பொருட்டுத் , தொகுத்தும் வகுத்தும் விரித்தும் செய்யப்படும் யாப்பினால் செய்து தருக எனச் சீயகங்கன் சொல்லத் , தொல்லாசிரியர் நூலின் வழியே ; நன்னூல் என்னும் பெயரினால் செய்தனன் பவணந்தி முனிவன் என்பதாம் .
#1 | ஆக்கியோன் பெயர் | - | பவணந்தி முனிவன் | 2 | வழி | - | முன்னோர் நூலின் வழி | 3 | எல்லை | - | குணகடல் குமரி குடகம் வேங்கடம் என்னும் நான்கு எல்லை | 4 | நூற்பெயர் | - | நன்னூல் | 5 | யாப்பு | - | நிகண்டு கற்று , இலக்கியப் பயிற்சி செய்தபின் இந்நூல் கேட்கத் தக்கது . | 6 | நுதலிய பொருள் | - | அரும்பொருள் ஐந்து | 7 | கேட்போர் | - | இலக்கியப் பயிற்சி செய்தவர் | 8 | பயன் | - | மொழித்திறத்தின் முட்டறுத்தல் | 9 | காலம் | - | சீயகங்கன் காலம் | 10 | களம் | - | சீயகங்கன் சபை | 11 | காரணம் | - | சீயகங்கன் சொன்னமையும் யாவரிடத்தும் இரக்கமுடைமையும் |
சிறப்புப் பாயிரம் முற்றும்
* இந்நூலுக்குச் சிறப்புப்பாயிரமாக விளங்கும் இப்பாடல் யார் இயற்றியது என்று தெரிய வில்லை. # மேலே பாயிரவியலில் கூறப்படும் சிறப்புப்பாயிரத்திற்குரிய 11 இலக்கணங்களும் அமைந்துள்ளமை காண்க .
|