மெய்யீற்றுப் புணரியல்

ணகர னகர வீறு

 
215மரமல் லெகின்மொழி யியல்பு மகரம்
மருவ வலிமெலி மிகலு மாகும் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
மரம் அல் எகின் மொழி - மரம் அல்லாத அன்னத்தை உணர்த்தும் எகின் என்னும் சொல் , இயல்பும் - வேற்றுமையிலும் வல்லினம் வர இறுதி இயல்பாதலும் , அகரம் மருவ வலி மெலி மிகலும் ஆகும் - இரு வழியிலும் அகரச்சாரியை பொருந்த வரும் வல்லெழுத்தாவது அதற்கு இனமாவது மிகுதலும் ஆகும் .

1. எகின்கால் , சிறை , தலை ,புறம் என வேற்றுமையிலும் இயல்பாயிற்று .

2. எகினப்புள் , எகினம்புள் எனவும் எகினக்கால் , எகினங்கால் எனவும் , இருவழியிலும் அகரம் வர மெலி மிகுந்தன .

அகரம் வருதற்கு வரும் எழுத்தைச் சொல்லாமையால் , நாற்கணமும் கொள்க . எகின மாட்சி , எகின வாழ்க்கை , எகின வழகு என வரும் .

' எகின் மொழி யியல்பு ' என்றது "ணனவல் லினம்வரட் டறவும் " என எய்தியது விலக்கல் ; 'அகரம் மருவும் ' என்றது அச்சூத்திரத்தால் இருவழிக்கண்ணும் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் , ' வலி மெலி மிகும் ' என்றது "இயல்பினும் விதியினும் " என்பதால் எய்தியதன்மேல் சிறப்புவிதி .