மவ் ஈறு - மகர ஈற்றுச் சொற்கள் , ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்பவும் = நாற்கணமும் வர இறுதியிலுள்ள மகர மெய் கெட விதி உயிர் ஈறாய் நின்று இயல்பு உயிர் ஈறு போலப் புணர்வனவும் , வன்மைக்கு இனம் ஆத் திரிபவும் ஆகும் - வல்லினம் வரிற் கெடாது அவற்றிற்கு இனமாகத் திரிவனவும் ஆகும் . உயிர் ஈறு ஒத்தலாவது . உயிர் வரின் அவை உடம்படு மெய் பெறவும் , வல்லினம் வரின் அவை மிகவும் , மெல்லினமும் இடையினமும் வரின் அவை இயல்பாகவும் புணர்தல் . மகர மெய் உயிரும் இடையினமும் வல்லினமும் வரக்கெடுவது வேற்றுமையிலும் அல்வழியிலே பண்புத்தொகை உவமைத் தொகைகளிலுமாம் எனவும் , மெல்லினம் வரக்கெடுவது இருவழியிலுமாம் எனவும் கொள்க . மகர மெய் வல்லினம் வரக் கெடாது இன மெல்லெழுத்தாகத் திரிவது பண்புத்தொகை உவமைத்தொகை இரண்டும் ஒழித்து ஒழிந்த அவ்வழிப் புணர்ச்சியிலாம் எனவும் , வினையாலணையும் பெயர் இறுதி மகரமும் , தனிக்குறிலைச் சார்ந்த மகரமும் , வேற்றுமையிலும் வல்லினம் வரின் கெடாது இன எழுத்தாகத் திரியும் எனவும் கொள்க 1. மரம் + அடி = மரவடி , மரம் + வேர் = மரவேர் , மரம் + கோடு = மரக்கோடு என வேற்றுமையிலும் , வட்டம் + ஆழி = வட்டவாழி , வட்டம் + வடிவம் = வட்டவடிவம் , வட்டம் + கல் = வட்டக்கல் எனப் பண்புத்தொகையிலும் , பவளம் + இதழ் = பவளவிதழ் , பவளம் + வாய் = பவளவாய் , கமலம் + கண் = கமலக்கண் என உவமைத் தொகையிலும் , உயிரும் இடையினமும் வல்லினமும் வர ஈறு கெட்டு உயிரீறு போல் முடிந்தன . மரம் + நார் = மரநார் எனவும , மரம் + நீண்டது = மரநீண்டது , வட்டம் + நேமி = வட்டநேமி எனவும் , மெல்லினம் வர ஈறு கெட்டு உயிரீறு போல் முடிந்தன . 2. நாம் + கடியம் = நாங்கடியம் , நிலம் + தீ = நிலந்தீ , உண்ணும் + சோறு = உண்ணுஞ்சோறு , உண்டனம் + சிறியேம் = உண்டனஞ்சிறியேம் , பூதனும் + தேவனும் = பூதனுந்தேவனும் என அல்வழிக்கண் எழுவாய்த்தொடர் முதலியவற்றில் வல்லினம் வர ஈறு திரிந்து முடிந்தது . சிறியேம் + கை = சிறியேங்கை எனவும் , நம் + கை = நங்கை எனவும் , வினையாலணையும் பெயர் இறுதி மகரமும் தனிக் குறிலைச் சார்ந்த மகரமும் வேற்றுமையிலும் வல்லினம் வரத் திரிந்து முடிந்தன . ' இனமாத் திரியும் ' என்றமையின் ' அருத்தாபத்தியால் , நாம் பெரியம் , சிறியேம் பண்பு எனப் பகரம் வருவழித் திரியாதென்பது பெற்றாம் .
|