பொதுப்பாயிரம்

ஆசிரியனது வரலாறு
நல்லாசிரியன் இலக்கணம்

 
30மங்கல மாகி யின்றி யமையா
தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகமலர் வுடையது பூவே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
மங்கலம் ஆகி - சுப கருமத்திற்கு உரியதாகி , இன்றி அமையாது - யாதொரு செயலும் அலங்கரிக்கும் தான் இல்லாது முடியாது ஆக , யாவரும் மகிழ்ந்து மேற்கொள - கண்டோர் யாவரும் களித்து மேலாகத் தன்னைச் சூடிக்கொள்ள , மெல்கி - மெல்லிய குணமுடையதாகி , பொழுதின் முகம் மலர்வு உடையது - மலர்தற்கு உரிய காலத்திலே முகம் விரிதலை உடையது , பூ- பூவாகும் .

சுப கருமத்துக்கு உரியவன் ஆகி யாதொரு செயலும் சிறப்பிக்கும் தான் இல்லாது முடியாது ஆகக் கண்டோர் யாவரும் களித்து மேலாகத் தன்னை வைத்துக் கொள்ள , மெல்லிய குணம் உடையவன் ஆகிப், பாடம் சொல்லுதற்கு உரிய காலத்திலே முக மலர்தலை உடையவன் ஆசிரியன் ஆதலால் , பூ அவனுக்கு உவமானம் ஆயிற்று .