மற்றைய நோக்காது = மொழிமாற்று முதலியவை போலப் பிறழ்ந்து செல்ல வேண்டாது , அடிதோறும் வான் பொருள் அற்று அற்று ஒழுகும் அஃது = யாற்று நீர் ஒழுக்குப்போல நெறிப்பட்டு அடிதோறும் சிறந்த பொருள் அற்று அறு ஒழுகுவதாகிய அப்பொருள்கோள் , யாற்றுப்புனல் = யாற்று நீர்ப் பொருள்கோளாம். "சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் - செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற் கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே" என வரும். இப்பாட்டினுள் சொல் என்னும் எழுவாயினை முதல எடுத்து, அதன் தொழிலாகிய இருந்து, ஈன்று, நிறுவி, இறைஞ்சி என்னும் வினை எச்சங்கள் ஒன்றனை ஒன்று கொள்ள இடையே முறை நிறுத்திக், காய்த்த என்னும் பயனிலையை இறுதியிலே தந்து முடித்தமையால், இப்பொருள் ஒழுகுதல் யாற்று நீர் ஒழுக்குப் போலுதல் காண்க. [ சொல் = நெற்பயிர். ] 61
|