சிறப்புப்பாயிரம்

தற்புகழ்ச்சி குற்றம் ஆகா இடங்கள்

 
53மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினுந்
தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினுந்
தன்னை மறுதலை பழித்த காலையுந்
தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும் - அரசனது சபைக்கு எழுதுஞ் சீட்டுக் கவியிலும் , தன்னுடைய ஆற்றல் உணரார் இடையினும் - தனது கல்வி வலிமையை அறியாதாரிடத்திலும் , மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் - பெரிய சபையில் வாதஞ் செய்து வெல்லும் பொழுதும் , தன்னை மறுதலை பழித்த காலையும் - தன்னை எதிரி பழித்த காலத்திலும் , தன்னைப் புகழ்தலும் புலவோற்குத் தகும் - தன்னைத் தான் புகழ்ந்து கொள்ளலும் புலவனுக்குத் தகும் .