சிறப்புப்பாயிரம்

பாயிரம் நூலுக்கு இன்றி அமையாச் சிறப்பினது என்பது

 
55மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல் - நாடிமுன்
ஐதுரையா நின்ற வணிந்துரையை யெந்நூற்கும்
பெய்துரையா வைத்தார் பெரிது.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
மாடக்குச் சித்திரமும் - மாளிகைக்குச் சித்திரமும் , மாநகர்க்குக் கோபுரமும் - பெரிய பட்டணத்திற்குக் கோபுரமும் , ஆடு அமைத்தோள் நல்லார்க்கு அணியும் போல் நாடி - நடிக்கின்ற மூங்கில் போலும் தோள்களையுடைய மங்கையருக்கு ஆபரணமும் போல நினைத்து , ஐது உரையா நின்ற அணிந்துரையை உரையா - அழகிய பொருளைச் சொல்லுகின்ற பாயிரத்தையுரைத்து; எந்நூற்கும் முன்பெரிது பெய்து வைத்தார் - எவ் வகைப் பட்ட பெரிய நூலுக்கும் முதலிலே பெரும்பாலும் சேர்த்து வைத்தார் ஆசிரியர்.

சிறப்புப்பாயிரத்து இலக்கணம் முற்றிற்று .

பாயிர இயல் முற்றும் .