மின் பின் பன் கன் தொழிற் பெயர் அனைய = மின் முதலிய நான்கு சொற்களும் முதல்நிலைத் தொழிற்பெயர் போல யகரம் அல்லாத மெய்கள் வரின் உகரச் சாரியை பொருந்தும் , கன் அ ஏற்று மென்மையோடு உறழும் = இவற்றுள் கன் என்னும் உகரச் சாரியையே அன்றி அகரச் சாரியையும் பெற்று வல்லினம் வந்தால் வரும் எழுத்தாவது அதற்கு இனமாவது மிகப் பெறும் . மின்னுக்கடிது , பின்னுக்கடிது , பன்னுக்கடிது , கன்னுக்கடிது , நன்று, வலிது எனவும் , கடுமை , நன்மை , வன்மை எனவும் , கன்னத்தட்டு , கன்னந்தட்டு எனவும் , கன்னத்தூக்கு , கன்னந்தூக்கு எனவும் , அல்வழி வேற்றுமையில் முறையே வந்தன. [பன் = பருத்தி, கன் = தராசுத்தட்டு.] ' தொழிற்பெய ரனைய ' என்றதும் ' அவ்வேற்றும் ' என்றதும் " ணனவல் லினம்வரட் டறவும் " என்னும் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் .மென்மையோடுறழும் என்றது " இயல்பினும் விதியினும் " என்னும் சூத்திரத்தால் எய்தியதன் மேல் சிறப்பு விதி.
|