உயிரீற்றுப் புணரியல்

குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி

 
195முதலிரு நான்கா மெண்முனர்ப் பத்தின்
இடையொற் றேக லாய்த மாகல்
எனவிரு விதியு மேற்கு மென்ப.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
முதல் இரு நான்குஆம் எண் முனர்ப் பத்தின் - ஒன்று முதலாகிய எட்டு எண்களின் முன்னும் வரும் பத்தென்னும் எண்ணினது , இடை ஒற்று ஏகல் - நடு நின்ற தகர மெய் கெடுதலும் , ஆய்தம் ஆகல் - தகரம் நின்ற இடத்து அது கெட ஆய்தம் வருதலும் , என இரு விதியும் ஏற்கும் என்ப - என்னும் இவ்விரண்டு விதியும் பொருந்தும் என்று செல்லுவர் புலவர்.

ஒருபது, ஒருபஃது , இருபது, இருபஃது , முப்பது, முப்பஃது , நாற்பது, நாற்பஃது , ஐம்பது, ஐம்பஃது , அறுபது, அறுபஃது , எழுபது, எழுபஃது , எண்பது, எண்பஃது என வரும்.