சொல்லதிகாரம்
[சொல்லினது அதிகரித்தலையுடைய படலம்]

பெயரியல்
[பெயர்ச்சொல்லின் இலக்கணம் உணர்த்துவது]
கடவுள் வணக்கமும் அதிகாரமும்

 
258முச்சக நிழற்று முழுமதி முக்குடை
அச்சுத னடிதொழு தறைகுவன் சொல்லே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
முச்சகம் நிழற்றும் முழுமதி முக்கடை அச்சுதன் அடி தொழுது = மூன்று உலகத்திற்கும் நிழலைச் செய்யும் நிறைந்த மதிபோலும் மூன்று குடையை உடைய அழியாத கடவுளுடைய அடிகளை வணங்கி , அறைகுவன் சொல் - சொல்லுவேன் , முன் அதிகாரத்துள் சொல்லிய எழுத்தினால் ஆகிய சொல் இலக்கணத்தை.

ஏகாரம் ஈற்றசை .