முன்னர் அவ்வொடு வருவை அவ்வும் = முன்னே சொல்லப்பட்ட வினாச்சுட்டுடனும் வேறுமாம் பொருளாதி ஆறனோடும் ஏற்றபடி வரும் வை விகுதி ஈற்றுப் பெயர்களும் அகர ஈற்றுப் பெயர்களும் சுட்டு இறு வவ்வும் = வகரமெய் ஈற்றுச் சுட்டுப்பெயர்களும் கள் இறு மொழியும் = கள் என்னும் பகுதிப்பொருள் விகுதி ஈற்றுப் பெயர்களும் ஒன்று அல் எண்ணும் - இரண்டு முதலாகிய எண் ஆகுபெயர்களும் உள்ள இல்ல பல்ல சில்ல உள இல பல சில = உள்ள என்பது முதலாகிய குறிப்புவினையால் அணைந்த எட்டுப் பெயர்களும் இன்னவும் = இவை போல்வன பிறவும் பலவின் பெயர் ஆகும் = அஃறிணைப் பன்மைப்பால் பெயர்களாகும். 1. எவை, ஏவை, யாவை எனவும், அவை,இவை, உவை எனவும், நெடியவை, கரியவை எனவும், வை விகுதிப் பெயர்கள் வரும் 2. பொருள, பொருளன; அகத்த, அகத்தன; மூலத்த, மூலத்தன; கோட்ட,கோட்டன; கரிய கரியன; ஓதுவ, ஓதுவன என அன் சாரியை பெற்றும் பெறாதும் அகரவிகுதிப் பெயர்கள் வரும். 3.அவ், இவ், உவ் என வகர மெய் ஈற்றுச் சுட்டுப் பெயர்கள் வரும். 4.யானைகள், குதிரைகள் எனக் கள் விகுதிப் பெயர்கள் வரும். 5. இரண்டு, மூன்று, பத்து, நூறு என எண் ஆகுபெயர்கள் வரும். 6. உள்ள முதலாகிய எட்டும் உரைக்கிடையில் காண்க. இன்னவும் என்றமையால், யா, பிற, மற்றைய என அஃறிணைப் பன்மைப் பொருள் குறித்து வருவன எல்லாம் கொள்க. இவ்வைம்பால் பெயர்களுள், ஆண்பால்பெயர்க்கு " னவ்வீறு " எனவே, அன், ஆன், மன், மான், ன் இவ் ஐந்தும்; பெண்பால் பெயர்க்கு " ளவ்வொற்று " எனவே அள், ஆள், ள் இம்மூன்றும்; பலர்பால் பெயர்க்கு " ரவ் வீற்ற " எனவே, அர், ஆர், மார், ர் இந்நான்கும், அடங்குதல் அறிக. 23
|