முதலை ஐ உறின் சினையைக் கண் உறும் = முதலினை ஐ உருபு பொருந்தினால் சினையைக் கண் உருபு பொருந்தும் , அதுமுதற்கு ஆயின் சினைக்கு ஐ ஆகும் = அது உருபு முதலுக்கு வரின் சினையினுக்கு ஐ உருபு வரும் . இனி இரட்டுறமொழிதல் என்னும் உத்தியால், 'அது, முதற்காயிற் சினைக்கையாகும் ' என்னும் வாக்கியத்தில், அது என்பதற்கு அக்கண்ணுருபு எனவும் பொருளுரைத்துக் கொள்க. யானையைக் காலின்கண் வெட்டினான், யானையது காலை வெட்டினான், யானையின் கண் காலை வெட்டினான் என வரும். எனவே, முதுல் சினை இரண்டிலும் ஐ உருபு வருவது சிறப்பன்று என்பதாயிற்று.
|