முதல் இவை சினை இவை என வேறு உள இல = கடங்கள் இவை படங்கள் இவை என்றாற் போல முதற்பொருள்கள் இவை சினைப்பொருள்கள் இவை என்பதற்கு இரண்டாக வேறுள்ளன இலவாம் , உரைப்போர் குறிப்பின = ஒரு பொருளையே இரண்டாகப் பகுத்துச் சொல்வோரது குறிப்பின் மாத்திரை அளவேயாம் , பிண்டமும் அற்று = பிண்டப் பொருளும் அத்தன்மைத்தாம் . யானையைக் குறித்தபோது யானை உண்டாக அதனுடைய கை கால் கொம்பு முதலியவை வேறில்லையாம் , அவ் அவயவத்தைக் குறித்தபோது அவை உண்டாக யானை வேறில்லையாம் , ஆதலால் இப்படிச் சொல்லப்பட்டன . இனிப் பிண்டப்பொருள், நெல்லைப் பொலியின்கண் வாரினான், நெல்லினது பொலியை வாரினான் என வரும். பிண்டப்பொருளாகிய பொலிக்குப்பையும் பிண்டித்த பொருளாகிய நெல்லும் வேறு ஆகாமையால், அவ் இரண்டன் இடத்தும் ஐ உருபு வருவது சிறப்பன்று என அறிக.
|