முன்மொழி = முன்மொழியும், பின்மொழி = பின்மொழியும் , பன்மொழி = அனைத்து மொழியும் , புறமொழி = அனைத்து மொழிக்கும் புறத்து வருமொழியும் , எனும் நான்கு இடத்தும் - என்று சொல்லப்படும் இந்நானகு இடங்களுள் ஒன்றிலே , தொகைப்பொருள் சிறக்கும் - தொகைநிலைத் தொடர்ப்பொருள் சிறந்து நிற்கும். 1 . குடம் வனைந்தான், குழிசி வனைந்தான் , வேங்கைப்பூ, சண்பகப்பூ, விரிபூ, குவிபூ, செந்தாமரை, வெண்டாமரை, வேற்கண், கயற்கண் என்பவைகளிலே, குடம் முதலிய முன்மொழிகள் இனம்விலக்கி நிற்றலால், அம்முன்மொழிகளில் பொருள் சிறந்தன. 2.நிலமுழுதான், கண்ணிமை, நீர்க்குவளை, சுடுதீ, செஞ்ஞாயிறு என்பவைகளிலே. நிலம் முதலிய முன் மொழிகள் இனமும் இனத்தை விலக்குதலும் இன்றி நிற்றலால், உழுதான் முதலிய பின்மொழிகளில் பொருள் சிறந்தன. 3. கபிலபரணர், சேரசோழபாண்டியர் புலிவிற் கெண்டை என்றல் தொடக்கத்து உம்மைத் தொகைகளிலே, அனைத்துமொழிகளிலும் பொருள் சிறந்தன. 4. பூங்குழல், உயிர்மெய் என்றல் தொடக்கத்து அன்மொழித்தொகைகளிலே, சொல்லுவோனுடைய கருத்து இவ்விரு மொழிப் பொருள் மேலது ஆகாது, இவ்விரு மொழியும் அல்லாத உடையாள் முதலிய புறமொழிப்பொருள் மேலது ஆதலால், அப் புறமொழிகளில் பொருள் சிறந்தன. 19
|