பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
மரபு வழுவமைதி

 
408முன்னத்தி னுணருங் கிளவியு முளவே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
முன்னத்தின் உணருங் கிளவியும்உள = வெளிப்படையான் அன்றிக் குறிப்பினால் பொருள் அறியப்படும் சொற்களும் சில உளவாம், [முன்னம் = குறிப்பு]

அவையாவன ஒன்றொழி பொதுச்சொல் முதற் சொல்லுவான் குறிப்பு ஈறாகப் பெயரிலிலே பன்னிரண்டாம் சூத்திரத்துச் சொல்லப்பட்டனவாம்.

குழை கொண்டு கோழி எறியும் வாழ்க்கையர் என்றவழிப், பெருஞ்செல்வ வாழ்க்கையர் என்பது குறிப்பினால் உணரப்பட்ட பொருளாம் பிறவும் அன்ன.

கேட்பவர்கள் வருத்தப்படாமல் அவர்களுக்குப் பொருள்விளங்கச் சொல்லல் மரபு ஆதலால், இது வழுவமைதி ஆயிற்று.