நூற்கு - ஒரு நூலுக்கு , முதல்நூல் - அந் நூலின் முதல் நூலும் , கருத்தன் - அந்நூல் செய்தவனும் , அளவு- அந் நூலின் அளவும் , மிகுதி - அந்நூலிலே சொல்லப்படுவனவற்றுள் மிகுதியாகிய கூறும் , பொருள் - அந் நூலிலே சொல்லப்பட்ட பொருளும் , செய்வித்தோன் - அந்நூல் செய்வோனுக்குப் பொருளுதவி செய்து அதனைச் செய்வித்தவனும் , தன்மை - அந்நூலின் குணமும் , முதல் நிமித்தினும் - முதலாகிய காரணங்களாலும் , இடுகுறியானும் - இடுகுறியானும் ; பெயர் எய்தும் - பெயர் வரும். முதல் நூலால் பெயர் பெற்றன பாரதம் முதலாயின . கருத்தனால் பெயர் பெற்றன தொல்காப்பியம் முதலாயின . அளவினால் பெயர் பெற்றன நாலடி நானூறு முதலாயின . மிகுதியால் பெயர் பெற்றன களவியல் முதலாயின . பொருளால் பெயர் பெற்றன அகப்பொருள் முதலாயின . செய்வித்தோனால் பெயர் பெற்றன சாதவாகனம் முதலாயின . தன்மையால் பெயர் பெற்றன நன்னூல் முதலாயின . இடுகுறியால் பெயர் பெற்றன கலைக்கோட்டுத் தண்டு முதலாயின .
|