பொதுப்பாயிரம்

நூலினது வரலாறு
வழி நூல் இன்னது என்பது

 
7முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி
அழியா மரபினது வழிநூ லாகும் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்து - கடவுளும் அவனருள்வழிப் பட்டோருமாகிய தொல்லாசிரியர் நூல்களினுடைய பொருண்முடிபு முழுவதும் ஒத்து , பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி - வழிநூல் செய்வோன் முதல் நூல் இருக்கவும் தான் வழிநூல் செய்தற்குக் காரணமாக வேண்டிய வேறுபாடுகளையும் உடன் சொல்லி , அழியா மரபினது வழி நூல் ஆகும் - அவ் வேறுபாடுகள் அறிவுடையோர் பலர்க்கும் ஒப்ப முடிந்தமையால் அழியாது நிலை பெற்று விளங்குந் தன்மையை யுடையது வழி நூலாம் .

முதல் நூலை முழுவதும் ஒத்துச் சிறிது வேறு பட்டிருப்பது வழிநூல் .

பின்னோன் வேண்டும் விகல்பம் கூறலாவது , பழைய இலக்கணங்களாகி இக்காலத்து வழங்காதவைகளை இறந்தது விலக்கல் என்னும் உத்தியினாலே விலக்கியும் , புதிய இலக்கணங்களாகிய இக்காலத்து வழங்கும் அவைகளை எதிரது போற்றல் என்னும் உத்தியினாலே தழுவியும் கூறுதல் முதலியன .

* இறையனார் அகப்பொருள் உரை மேற்கோள் .