மூன்று (உருபு) = மூன்றாம் வேற்றுமை யுருபிற்கும் , ஆறு உருபு = ஆறாம் வேற்றுமை உருபிற்கும் , எண் = இயல்பாயும் விகாரமாயும் வரும் எண்ணிற்கும் , வினைத்தொகை - வினைத்தொகைக்கும் , சுட்டு = சுட்டுப் பெயருக்கும் , ஈறு ஆகும் உகரம் முன்னர் இயல்பு ஆம் = ஈறாகிய முற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் இயல்பாகும். 1. சாத்தனொடு கொண்டான், சென்றான் , தந்தான், போயினான் என மூன்றாம் வேற்றுமை உருபின் முன் இயல்பாயின. 2. சாத்தனது கை, செவி, தலை, புறம் என ஆறாம் வேற்றுமை உருபின் முன் இயல்பாயின. 3. ஒரு கை, செவி, தலை, புறம் என எண்ணுப்பெயர் முன் இயல்பாயின. இரு, அறு, எழு, ஏழு , என்பவற்றோடும் இப்படியே ஒட்டுக, ஏழு என்பது இயல்பாய எண்ணுப் பெயர் , மற்றவை விகார எண்ணுப்பெயர். 4. அடுகளிறு,சேனை , தானை , படை என வினைத் தொகை முன் இயல்பாயின. தரு , புகு, தெறு , எழு , விரவு முதலியவற்றோடும் இப்படியே ஒட்டுக. 5. அது குறிது , சிறிது, தீது , பெரிது எனவும், அது கண்டான் , செகுத்தான் , தந்தான் , படைத்தான் எனவும் சுட்டுப்பெயர் முன் இரு வழியும் இயல்பாயின. இது , உது என்பவற்றோடும் இப்படியே ஒட்டுக. உது காண், உதுக் காண் என விகற்பித்து வருவது 'இயல்பின் விகாரமும்' என்னும் இரண்டாம் வேற்றுமைப் புறனடைச் சூத்திரத்தில் 'அன்ன பிறவும்' என்பதனால் அமையும். இது 'இயல்பினும் விதியினும்' என்னும் சூத்திரத்தால் எய்தியது விலக்கல்.
|