மூன்றன் உறுப்பு - இறுதி உயிர்மெய் கெட நின்ற மூன்று என்னும் எண்ணினது னகர மெய் , அழிவும் - கெடுதலும் , வந்ததும் ஆகும் - வரும் மெய்யாகத் திரிதலும் ஆகும் ( ஏற்புழி - ஏற்குமிடத்து) ஏற்புழி என்றதனால் , னகர மெய் கெடுவது உயிர் வருமிடத்து எனக் கொள்க . மூவொன்று , மூவெடை , மூவுழக்கு , மூவுலகு எனவும் , முப்பது , முக்கழஞ்சு , முந்நாழி , முந்நூல் , முவ் வட்டி எனவும் வரும் . இன்னும் , ஏற்புழி என்றதனால் , வகரம் வருமிடத்து முவ்வட்டி என முடிதலே யன்றி , மூவட்டி என முதல் குறுகாது னகர மெய் கெட்டு முடிதலும் , யகரம் வருமிடத்து முவ் யானை என னகர மெய் வகர மெய்யாகத் திரிந்து முடிதலும் கொள்க.
|