பெயரியல்

வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை

 
297மூன்றா வதனுரு பாலா னோடொடு
கருவி கருத்தா வுடனிகழ் வதன்பொருள்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
மூன்றாவதன் உருபு ஆல் ஆன் ஒடு ஓடு = மூன்றாம் வேற்றுமையின் உருபு முன்சொல்லப்பட்ட ஆலே அன்றி ஆனும் ஓடும் ஓடுவுமாம்; அதன் பொருள் = அவ் உருபுகளின் பொருள்களாவன; கருவி = கருவிப்பொருளும், கருத்தா = வினைமுதல்பொருளும்; உடனிகழ்வு = உடன் நிழ்ச்சிப் பொருளும் ஆகிய அவ் உருபுகளை ஏற்ற பெயர்ப்பொருள்கள் வேறுபட்ட மூன்றும் ஆகும்.

இந்நான்கு உருபுகளுக்கும் மூன்று பொருள்களும் ஆம் எனக் கூட்டிச் சொன்னார் ஆயினும், ஏற்புழிக் கோடல் என்னும் உத்தியால், அவ் உருபுகளுள், ஆல் ஆன் உருபுகளுக்குக் கருவியும் வினைமுதலும், ஓடு, ஓடு உருபுகளுக்கு உடன் நிகழ்ச்சியும் சிறந்தன எனக் கொள்க.

வாளால் வெட்டினான் , வாளான் வெட்டினான்............கருவி
அரசனாலாகிய கோயில் , அரசனானாகிய கோயில்.......கருவி
மைந்தனோடு தந்தை வந்தான் , மைந்தனொடு தந்தை வந்தான்.......உடனிகழ்ச்சி
கருவியாவது வினைமுதல் தொழில்பயனைச் செயப்படுபொருளில் சேர்ப்பது . 'கருவி, காரணம், ஏது' என்பன ஒரு பொருட்சொற்கள்.

' வாளால் பகைவனை வெட்டினான்' என்புழி, வாளைப்பற்றி வீசுதல் வினைமுதலினது தொழில்; பகைவன் உடம்பு அறுதல் அத்தொழிற்குப் பயன்; அப்பயனைப் பகைவனாகிய செயப்படுபொருளிலே சேர்ப்பது வாள் ஆதலால் வாள் கருவிப்பொருள்.

அக் கருவிப்பொருள் முதற்கருவியும் துணைக்கருவியும் என இருவகைப்படும். அவற்றுள், முதற்கருவியானது செயப்படுபொருளோடு ஒற்றுமை உடையது ; முதற்காரணம், ஆதிகாரணம், சமவாயிகாரணம் என்பன ஒருபொருள் சொற்கள். துணைக்கருவியாவது முதற்கருவிக்குத் துணையாய் அது காரியப்படும் அளவும் உடன் நிகழ்வது .

1. மண்ணாற் குடத்தை வனைந்தான் என்புழிக், குடமாகிய காரியத்தோடு ஒற்றுமை உடையது மண்ணாதலால் , மண் முதற் கருவி.

2.திரிகையாற் குடத்தை வனைந்தான் என்புழி, மண்ணாகிய முதற்கருவிக்குத் துணையாய் அது குடமாகக் காரியப்படுமளவும் உடன் நிகழ்வது திரிகை ஆதலால் திரிகை துணைக்கருவி .

இக்கருவிப்பொருள் அகக்கருவி , புறக்கருவி ஒற்றுமைக்கருவி என மூன்றாயும் வரும் எனக் கொள்க .

மனத்தால் நினைந்தான் ; வாளால் வெட்டினான்; அறிவால் அறிந்தான் என இவை வரும்.

வினைமுதல் இன்னது என்பது முன்னே எழுவாய்ச் சூத்திர உரையில் காட்டப்பட்டது. அவ் எழுவாய் வேற்றுமையில் வரும் வினைமுதற்பெயர் தன் விகுதி வினையினாலே முடியும்; இம்மூன்றாம் வேற்றுமையில் வரும் வினைமுதற்பெயர் செயப்படுபொருள் விகுதி வினையினாலே முடியும்; இதுவே அவ் இரண்டற்கும் வேறுபாடாம்.

1. குயவன் குடத்தை வனைந்தான் என்புழிக், குயவன் என்னும் எழுவாய்க் கருத்தாத் தனக்குரிய ஆன் விகுதி வினையினாலே முடிந்தது.

2. குயவனால் பானை வனையப்பட்டது என்புழிக், குயவன் என்னும் மூன்றன் உருபின் கருத்தாத் தனக்குரிய ஆன்விகுதி வினையினாலே முடியாது செயப்படுபொருட்குரிய துவ்விகுதி வினையினாலே முடிந்தது.

அவ் இருவகை வினைமுதலும், தனித்தனியே, இயற்றும் வினைமுதலும் ஏவும் வினைமுதலும் என இருவகைப்படும். அவற்றுள் , இயற்றும் வினைமுதலாவது கருவியைத் தொழிற்படுத்துவது . ஏவும் வினைமுதலாவது அவ்வியற்றும் வினை முதலினது தொழிலை உண்டாக்கும் தொழிலுடையது.

1.தச்சன் கோயில் கட்டினான்; தச்சனால் கோயில் கட்டப்பட்டது - என்புழித், தச்சன் இயற்றுத்தல் கருத்தா.
2.அரசன் கோயில் கட்டுவித்தான்; அரசனால் கோயில் கட்டுவிக்கப்பட்டது.- என்புழி, ஏவுதற் கருத்தா. உடனிகழ்ச்சிப் பொருளாவது, வினைகொண்டு முடியும் பொருளின் தொழிலைத் தன்னிடத்தும் உடன் நிகழ்வதாக உடைய பொருளாம்.

மைந்தனோடு தந்தை வந்தான் என்புழித் தந்தை வினைகொண்டு முடியும் பொருள். வருதல் அப்பொருளின் தொழில்; அவ்வருதல் தொழிலைத் தன்னிடத்தும் உடனிகழ்வதாகவுடைய பொருள் மைந்தன் ஆதலால் மைந்தன் உடனிகழ்ச்சிப் பொருள்.

அவ்வுடனிகழ்ச்சிப் பொருள் , தலைமைப்பொருளும், தலைமையில் பொருளும் என இருவகைப்படும். அவற்றுள் தலைமைப்பொருளாவது வினைக்கொண்டு முடியும் பொருளின் உயர்வுடையுது ; தலைமையில் பொருளாவது வினைகொண்டு முடியும் பொருளின் இழிவுடையது.

1. மன்னவனோடு மந்திரி வந்தான் என்புழி வினை கொண்டு முடியும் பொருள் மந்திரி; அப் பொருளின் உயர்வுடைய பொருள் மன்னவன் ஆதலால், உடனிகழ்ச்சிப் பொருள் தலைமைப் பொருளாயிற்று .

2. மாணாக்கனோடாசிரியன் வந்தான் என்புழி; வினை கொண்டு முடியும் பொருள் ஆசிரியன் , அப்பொருளின் இழிவுடைய பொருள் மாணாக்கன் ஆதலால், உடனிகழ்ச்சிப் பொருள் தலைமையில் பொருளாயிற்று.

ஆல், ஆன் உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளிலும். ஓடு, ஒடு உருபுகள் வினைமுதற்பொருள் கருவிப் பொருள்களிலும் , ஒரோ இடத்து அருகி வரும்.

1. " தூங்குகையா னோங்கு நடைய " " உறழ்மணியா னுயர் மருப்பின" . என, ஆனுருபு உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது காண்க. இவற்றிற்குத் , தூங்கு கையோடு என்றும், உறழ் மணியோடு என்றும், பொருள் கொள்க. ' தூங்குகையா னோங்கு நடைய' என்புழி, நடத்தலால் ஆகிய வேறு இடப்புணர்ச்சி, கைக்கும் யானைக்கும் உளதாதல் அறிக. ' உறழ்மணி யானுயர் மருப்பின, என்புழி, யானையினது உடைமை மணிக்கும் மருப்பிற்கும் உளதாதல் அறிக.

2. "கொடியொடு துவக்குண்டான்" ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்' என்புழிக். கொடியொடு, ஊசியொடு என்பன, கொடியால், ஊசியால் எனப் பொருள்படுதலும் , கொடி , ஊசி என்பன முறையே வினைமுதற்பொருள் கருவிப்பொருள் ஆதலும் காண்க.

சிறுபான்மை ஆல்,ஆன் உருபுகள் முதற்பொருள் மேல் ஏற்றிச் சொல்லப்படும் விவகாரத்தை உடைய சினைப்பொருளிலும் , தொறுப் பொருளிலும் வரும்.

1.கண்ணாற் குருடன்; காலால் முடவன் என்புழிக், குருடன் முடவன் முதற்பொருள்கள்; அவைகளின் மேலேற்றிச் சொல்லப்படும் விகாரம் குருட்டுத் தன்மையும் முடத்தன்மையும்; அவ்விகாரத்தை உடைய சினைப்பொருள்கள் கண்ணும் காலும் ஆதல் காண்க.

2. "ஊரானோர் தேவகுலம்" என்புழி, ஊர்தோறும் ஒவ்வொரு தேவகுலம் எனப் பொருள் கொள்ளப்படும், தொறு என்பது தன்னை ஏற்ற பெயர்ப்பொருள் எங்கும் அப்பெயர்ப் பொருளோடு இயையும் பொருள் இருக்கை.

சிறுபான்மை ஓடு, ஓடு உருபுகள், வேறுவினை உடனிகழ்ச்சிப் பொருளிலும், வினையில் பொருளிலும், கலப்புறு பொருளிலும், ஒப்புப்பொருளிலும் ஒப்பல் ஒப்புப் பொருளிலும், ஒற்றுமைப் பொருளிலும், அடைமொழிப் பொருளிலும் வரும்.

1. "தொடியொடு தொல்கவின் வாடிய தோள்." என்புழி, வினைகொண்டு முடியும் பொருள் கவின், அதனது தொழில் வாடல் ; அத்தொழில் நிகழும் காலையில் நிகழும் வேறு தொழில் சோர்தல், அதனை உடையது தொடி ஆதலால், தொடி வேறுவினை உடனிகழ்ச்சிப்பொருள்.

2. "மலையொடு பொருத மால்யானை" என்புழிப், பொருதல் யானைக்கு அல்லது மலைக்கு இல்லாமையால், மலை வினையில்பொருள்.

3. "பாலொடு தேன் கலந்தற்றே" என்புழித், தேனைக் கலக்கப்படுதலால் பால் கலப்புறு பொருள்.

4. "மதியொ டொக்கு முகம்" என்புழி, முகத்துக்கு உவமானம் ஆகுகையால், மதி ஒப்புப்பொருள்.

5."விலங்கொடு மக்களனையர்" என்புழி, ஒப்பல்லாத விலங்கு ஒப்பாகச் சொல்லப்படுதலால், விலங்கு ஒப்பு அல் ஒப்புப் பொருள்.

6. "எழுத்தொடு புணர்ந்த சொல்" என்புழி, உருபைத் தொடர்ந்த சொல் என்னும் பொருளோடு ஒற்றுமையுடையது ஆதலால், எழுத்து ஒற்றுமைப் பொருள்.

7. 'கோபத்தோடு வந்தான்' என்புழி, வருதற்கு விசேடணம் ஆதலால், கோபம் அடைமொழிப்பொருள்.

ஆல் ஆன் உருபுகள் நிற்றற்கு உரிய இடத்துக் கொண்டு என்பதும், ஓடு ஒடு உருபுகள் நிற்றற்கு உரிய இடத்து உடன் என்பதும் சொல் உருபுகளாக வரும்.

வாள்கொண்டு வெட்டினான் , தந்தையுடன் மைந்தன் வந்தான் என வரும்.

40