உயிரளபு (மாத்திரை) மூன்று (ஆம்) - உயிரளபெடைக்கு மாத்திரை மூன்றாம் , நெடில் (மாத்திரை) இரண்டு ஆம் - நெட்டெழுத்திற்கு மாத்திரை இரண்டாம் , குறில் ஐ (க் குறுக்கும்) ஒளக் குறுக்கம் ஒற்றளபு மாத்திரை ஒன்று (ஆம்) - குற்றெழுத்திற்கும் ஐகாரக் குறுக்கத்திற்கும் ஒளகாரக் குறுக்கத்திற்கும் ஒற்றள பெடைக்கும் தனித்தனி மாத்திரை ஒன்றாம் , ஒற்று இக் (குறுக்கம்) உக் குறுக்கம் ஆய்தம் (மாத்திரை) அரை (ஆம்) - மெய்யெழுத்திற்கும் குற்றியலிகரத்திற்கும் குற்றியலுகரத்திற்கும் ஆய்தத்திற்கும் தனித்தனி மாத்திரை அரையாம் , குறள் மஃகான் (குறள்) ஆய்தம் மாத்திரை கால் (ஆம்) - மகரக் குறுக்கத்திற்கும் ஆய்தக் குறுக்கத்திற்கும் தனித்தனி மாத்திரை காலாம் . மேலே 'உயிர் அளவாய்' ( சூத். 89) என்றதனால் , இங்கே உயிர்மெய்க்கு மாத்திரை கூறாதொழிந்தார் ; இது உரைத்தாமென்னும் உத்தி . "செறாஅ அய் வாழிய நெஞ்சு" என உயிரளபெடை சிறுபான்மை நான்கு மாத்திரையினதாய் வருதலும் உண்டு.
|