எழுத்தியல்

எழுத்தின் சாரியைகள்

 
126மெய்க ளகரமு நெட்டுயிர் காரமும்
ஐயௌக் கானு மிருமைக் குறிலிவ்
விரண்டொடு கரமுமாஞ் சாரியை பெறும்பிற.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
மெய்கள் அகரமும் - ஒற்றுக்கள் அகரச் சாரியையும் , நெட்டுயிர் காரமும் - உயிர் நெடில்கள் காரச் சாரியையும் , ஐ ஒளக் காணும் - அவற்றுள் ஐகார ஒளகாரங்கள் காரச் சாரியையுடனே கான் சாரியையும் இருமைக் குறில் இவ்விரண்டோடு கரமும் - உயிர்க்குறிலும் உயிர்மெய்க்குறிலும் காரம் , கான் என்னும் இரண்டுடனே கரச் சாரியையும் , ஆம் சாரியை பெறும் - ஆகின்ற சாரியைகளைப் பறும் .

மெய்க ளவ்வும் என்னாது அகரமும் என்றதனால் , இப்படியே கரங் காரங் கான் வரின் , அவை சாரியையாகிய , அகரத்தினது சாரியை எனக் கொள்க .

குற்றெழுத்தோடு கான் சாரியை புணரும் போது இடையே ஆய்தம் விரியும் .

மெய்கள் சாரியை பெறாதும் உயிர்மெய் நெடில்கள் சாரியை பெற்றும் வருதலில்லை .

க, ங எனவும்,
ஆகாரம், ஐகாரம், ஒளகாரம் எனவும் ,
ஐகான், ஒளகான் எனவும்,
அகாரம், அஃகான் , அகரம், மகாரம்,
மஃகான், மகரம் எனவும் வரும்.

விகற்பத்தின் முடித்தல் என்னும் உத்தியால் மேல் விரிந்து முடிந்து கிடந்தனவற்றை விளக்கவேண்டி இங்கே தொகுத்து முடித்தலால் , இச் சூத்திரம் முடிந்தது முடித்தல் என்னும் உத்தி .