மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்களும் -மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாக உடைய பகாப்பதம் பகுபதம் என்னும் இரண்டு பதங்களும் , தன்னொடும் பிறிதொடும் - தன்னொடு தானும் பிறிதொடு பிறிதுமாய் , அல்வழி வேற்றுமைப் பொருளின் பொருந்துழி - அல்வழிப் பொருளினாலேனும் வேற்றுமைப் பொருளினாலேனும் பொருந்தும் இடத்து , நிலை வரு மொழிகள் இயல்போடு விகாரத்து இயைவது - நிலைமொழியும் வருமொழியும் இயல்போடு ஆயினும் விகாரத்தோடு ஆயினும் பொருந்துவது; புணர்ப்பு - முன் சொல்லப்பட்ட புணர்ச்சியாம். மெய்யுயிர் முதலீறாம் எனவே, மெய்ம் முதல் மெய்யீறு, உயிர்முதல் உயிரீறு, மெய்ம் முதல் உயி ரீறு, உயிர்முதல் மெய்யீறு என நால் வகைப்படும் என்றாராயிற்று. இயல்பு, இயற்கை, தன்மை என்பன ஒருபொருள்சொற்கள். விகாரம், செயல், செயற்கை, விதி என்பன ஒருபொருள் சொற்கள்.
|