மென்றொடர் மொழியுள் சில - மென்தொடர்க் குற்றியலுகர மொழிகளுள்ளே சில மொழிகள் , வேற்றுமையில் தம் இனம் வன்றொடர் - வேற்றுமையிலே தமக்கு இனமாகிய வன்றொடர்க் குற்றியலுகர, மொழிகளாக ; ஆகாமன் - ஆதலை ஒழிந்தன பெரும்பாலன . வருமழுத்தைச் சொல்லாமையால் , நாற்கணமும் கொள்க . மருந்து + பை = மருத்துப்பை , சுரும்பு + நாண் = சுருப்புநாண் . கரும்பு + வில் = கருப்புவில் , கன்று + ஆ = கற்றா என வரும் . வண்டுக்கால் , பந்துத்திரட்சி முதலியன எல்லாம் வன்தொடரா ஆகாதன . சில வன்தொடராம் எனவே , ஆகாதன பல என்பது தானே வந்தியையவும் . மன்னே என்ற மிகையாலே , எற்புடம்பு , அற்புத்தளை , குரக்குமனம் எனச் சிறுபான்மை அல்வழிக்கண் வன்தொடர் ஆதலும் கொள்க . சில மென்தொடர்க் குற்றியலுகர மொழிகள் மூவினமும்வரின் தம்மினம் வன்தொடராம் என்றது எய்தாதது எய்துவித்தல் ; உயிர் வரின் தம்மினம் வன்தொடராம் என்றது ' உயிர்வரி னுக்குறள் ' என்னும் சூத்திரத்தால் எய்தியதன்மேல் சிறப்புவிதி .
|