பொதுப்பாயிரம்

ஆசிரியர் ஆகாதவர் இலக்கணம்

 
31மொழிகுண மின்மையு மிழிகுண வியல்பும்
அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலுங்
கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோ ரிலரா சிரியரா குதலே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
மொழி குணம் இன்மையும் - பாடம் சொல்லும் குணம் இல்லாமையையும் , இழிகுண இயல்பும் -இழிகுணம் ஆகிய இயற்கையையும் , அழுக்காறு - பிறருக்கு வரும் கல்வியைக் குறித்துக் கொள்ளும் பொறாமையையும் , அவா-பொருளின் மேல் அதிகமாக வைக்கும் ஆசையையும் , வஞ்சம் - மெய்ப் பொருளை மறைத்துப் பொய்ப் பொருளைக் காட்டி வஞ்சித்தலையும் , அச்சம் ஆடலும் - கேட்போருக்கு அச்சம் உண்டாகப் பேசுதலையும் , கழற்குடம் , மடல் பனை , பருத்திக் குண்டிகை , முடத்தெங்கு ஒப்புஎன - கழற் குடமும் மடல்பனையும் பருத்திக்குண்டிகையும் , முடத்தெங்கும் ஆகிய நான்கனையும் ஒப்பு என்று சொல்ல , முரண்கொள் சிந்தையும் உடையோர் - மாறுபாடு கொண்ட கருத்தையும் தம்மிடத்தில் உடைவர் , ஆசிரியர் ஆகுதல் இலர் - கற்பிக்கும் ஆசிரியர் ஆகுதல் இலர் ஆவர் .