எழுத்தியல்

1. எண்
எழுத்து இன்னது என்பதும் அதன் வகையும்

 
58மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
மொழி முதல் காரணம் அணுத்திரள் ஆம் ஒலி எழுத்து - மொழிக்கு முதல் காரணமும் அணுத்திரளின் காரியமும் ஆகிய ஒலியாவது எழுத்து , அது முதல் சார்பு என இரு வகைத்து - அது முதல் எழுத்தும் சார்பெழுத்தும் என இரு வகையினை உடைத்து.

அணுத் திரள் - அணுக்கூட்டம் , இங்கே அணு என்றது செவிப்புலனாம் அணுவை , அது ஒலி நுட்பம் . மொழிக்கு முதல்காரணம் எழுத்து ஆனாற்போல , எழுத்திற்கு முதல்காரணம் அணுக் கூட்டம் ஆம் . அணுக்கூட்டத்தின் காரியம் எழுத்து ஆனாற்போல எழுத்தின் காரியம் மொழியாம்.

காரியமாவது ஆக்கப்பட்டது . காரணமாவது காரியத்திற்கு இன்றி அமையாததாய் அதற்கு முன் காலத்து இருப்பது . முதல் காரணமும் துணைக் காரணமும் எனக் காரணம் இருவகைப்படும் . முதல்காரணமாவது காரியத்தோடு ஒற்றுமை உடையது . துணைக்காரணமாவது முதல் காரணத்திற்குத் துணையாய் அது காரியப்படும் அளவும் உடன்நிகழ்வது . குடம்காரியம் , அதற்கு முதல்காரணம் மண் ; துணைக் காரணம் திரிகை . மொழி காரியம் , அதனின் வேறு ஆகாது அதனோடு ஒற்றுமை உடையது எழுத்து ஆதலால் , அதற்கு எழுத்து முதற்காரணம் . எழுத்துக் காரியம் , அதனின் வேறு ஆகாது அதனோடு ஒற்றுமை உடையது செவிப்புலனாம் அணு ஆதலால் அதற்கு அவ் அணு முதல் காரணம் .